fbpx
Homeபிற செய்திகள்பயணத்தை எளிதாக்கிய ‘சென்னை ஒன்’ செயலி!

பயணத்தை எளிதாக்கிய ‘சென்னை ஒன்’ செயலி!

சென்னை மாநகரப் பேருந்துகளில் கூட்டமான நேரங்களில் பயணிக்கும் போது நடத்துனரிடமிருந்து டிக்கெட் வாங்குவதற்கு சிரமமாக இருந்தது. சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA – கும்டா) அறிமுகப்படுத்திய ‘சென்னை ஒன்’ செயலி, இதனை டிஜிட்டல் முறையில் மிக எளிதாக்கியுள்ளது.

ஓலா, உபர் போன்ற சேவைகளின் பணமில்லா வசதியைப் போலவே, இப்போது சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகம் (MTC) பேருந்துகள், ரயில்வே மற்றும் மெட்ரோ பயணங்களுக்கான டிக்கெட்டுகளை இந்த செயலியில் வாங்கலாம். தவிர, பேருந்து வருகை நேரத்தையும் செயலி மூலம் நேரடியாக கண்காணிக்கலாம்.

இந்த செயலி எப்படி செயலாற்றுகிறது என்பதை, முகப்பேர் & தி.நகர் மற்றும் சென்ட்ரல் – ராயபுரம் வழித்தடத்தில் பயணித்த செய்தியாளர்கள் இதன் அனைத்து அம்சங்களும் சீராக செயல்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

சோதனையின் போது, நேரடியாக பேருந்துகளைப் பார்க்கும் வசதி, கியூஆர் கோடு ஸ்கேன் செய்து உடனடியாக டிக்கெட் பெறும் வசதி ஆகியவை சீராக செயல்பட்டன. உதாரணமாக, 104 சிஎக்ஸ் பேருந்து நேரம் தவறாமல் வந்தது. அதன்பின் செயலி, மெட்ரோ மற்றும் பிற சென்னை பெருநகர போக்குவரத்துக்கழக பேருந்துகளை இணைத்து, பயணத்தை எளிதாக பரிந்துரைத்தது.

‘சென்னை ஒன்’ செயலியின் முக்கிய அம்சம், மாநகர அரசு பேருந்துகள் ரயில்வே, மெட்ரோ மூன்றையும் ஒரே செயலியில் பயன்படுத்தலாம். கியூஆர் கோடு ஸ்கேன் செய்து உடனே டிக்கெட் பெறலாம்.

ஏற்கனவே, நடத்துனரிடமிருந்து ஜி-பே மற்றும் கார்டு மூலம் டிக்கெட் பெறும் வசதி இருந்தபோதும், இந்த கியூஆர் கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதி பயணத்தை மேலும் எளிதாக்கி விட்டது. செயலி அறிமுகம் செய்ததும் ஒரே நாளில் 1.30 லட்சம் பேர் அதனை பதிவிறக்கம் செய்துள்ளனர். மறுநாள் இந்த எண்ணிக்கை இரு மடங்கானது. சென்னை மாநகர மக்களின் அமோக வரவேற்பை இச்செயலி பெற்றுள்ளது.

இதன் அடுத்த கட்டமாக, ஓலா, உபர், ரேபிடோ, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் ஆம்னி பேருந்துகளையும் இதில் இணைக்க கும்டா திட்டமிட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துவைத்த இந்த செயலியின் பயன்கள் மாநிலம் முழுவதும் கிடைக்கும் வகையில் குறிப்பாக பிற மாநகராட்சி பகுதிகளில் எப்படியெல்லாம் அமல்படுத்த முடியுமோ அவற்றை ஆராய்ந்து செயலியின் பயன்பாட்டை விரிவாக்கம் செய்யும் பணியை தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img