கோவை மத்திய ரயில் நிலையம் மற்றும் வடகோவை ரயில் நிலையம் ஆகிய இரண்டையும் மேம்படுத்துவது குறித்தான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பன்னாலால், கோவை எம்பி கணபதி ராஜ்குமார், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் ரயில்வே துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து ரயில் நிலையத்தில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் ரயில் நிலையத்தை மேம்படுத்துதல், போக்குவரத்து நெரிசலை குறைத்தல், அடிப்படை வசதிகளை அதிகப்படுத்துதல், கூடுதலான ரயில்கள் இயக்கம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கோவை எம்பி கணபதி ராஜ்குமார் கூறியதாவது: கோவை ரயில் நிலையத்தை மேம் படுத்து வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து மதுரை மார்க்கமாக தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்லும் ரயில், கோவையில் இருந்து பெங்களூர் செல்லும் தினசரி ரயில் ஆகியவை கூடுதலாக விட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவை- சேலம் மெமு ரயில்கள் இயக்க வேண்டும் என்றும் பொள்ளாச்சி – கோவை இடையே ரயில்கள் வேண்டுமென கேட்டுள்ளோம். அடிப்படை வசதிகளான கழிவறைகள், மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள் ஆகியவை கூடுதலாக வேண்டும் என்ற கோரிக்கையும் மக்களின் சார்பாக முன்வைத்துள்ளோம். போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இங்கிருந்து புறப்படும் ரயில்கள் சிலவற்றை வடகோவை, போத்தனூருக்கு மாற்றினால் போக்குவரத்து நெரிசல் குறையும் என ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
கோவையில் இருந்து திருச்சி மார்க்கமாக வேளாங்கண்ணிக்கும் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்துள்ளோம். அதுமட்டுமின்றி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ரயில்வே போலீசாரின் எண்ணிக்கையை கூடுதலாக கேட்டுக் கொண்டோம்.
காவலர்களுக்காக உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



