கரூரில் கல்லூரி மாணாக்கர்கள் பங்கேற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கரூர் சிஎஸ்ஐ பிஷப் சாலமன் துரைசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் முதல்வர் உமேஷ் சாமுவேல், கரூர் நகர காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
அண்மைக் காலமாக இளைஞர்களிடையே போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதை தடுப்பதற்காக இது போன்ற விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் அரவிந்த், சஞ்சீவி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் துரைக்கண்ணு உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கல்லூரியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி ஜவஹர் பஜார், பேருந்து நிலைய ரவுண்டானா, திண்ணப்ப கார்னர் வழியாக மீண்டும் கல்லூரியை வந்து அடைந்தது.
பேரணியின் போது போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணாக்கர்கள் பதாகைகள் ஏந்தியும் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர்.



