சமூக ஊடகங்கள், இணைய விளையாட்டுகள் உள்ளிட்டவற்றால் அடிமையாவோர் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு இணைய போதைக்கு அடிமையாகி, அதில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் சிறார்கள், இளைஞர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை தலைமை தாங்கி செயல்படுத்தப் போகிறார், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் யாதன் பால் சிங் பல்ஹாரா.
இந்தியாவின் பொருளாதார ஆய்வில், இணையத்தை அதிகமாகப் பயன்படுத்துவது சிறுவர்கள், இளம் வயதினருக்கு மனநலப் பிரச்சினைகளை உண்டாக்குகிறது. அப்படி பாதிக்கப்பட்ட இளையர்களை இணையத்தில் இருந்து விலக்கி வைக்க பள்ளி மற்றும் குடும்ப அளவிலான தலையீடுகளின் அவசரத் தேவையாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் இணைய தொழில்நுட்ப அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராட உதவும் வகையில், நாட்டிலேயே முதல்முறையாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு சிறப்பு மையம் அமைக்கப்படுகிறது.
இந்த மையம் இணையம் சார்ந்த பல்வேறு போதை பழக்க வழக்கங்களை விரிவாகக் கையாளும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் இதில் பயன்படுத்தப்பட உள்ளது. இணையம் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டுடன் தொடர்புடைய மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் மற்றும் அடிமையாதல் ஆகியவற்றைக் குறைக்க இம்மையம் உதவும் என்பதில் சந்தேகமில்லை.
மது உள்ளிட்ட போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்கு எத்தனையோ மருத்துவ மையங்கள் செயல்படுகின்றன. அதைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் இணைய போதைக்கும் அம்மாதிரியான மையங்கள் முக்கிய தேவையாக மாறி வருகிறது.
இது கவலைக்குரிய விஷயமாகும். ஏனெனில் இப்போதே இணைய போதைக்கு அடிமையானோர் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அவர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு போகும்முன் மீட்டெடுத்து காப்பாற்ற வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.
எனவே இணைய போதைக்கு சிகிச்சை அளிக்க தனிப்பிரிவு அமைப்பதன் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, பூனைக்கு மணி கட்டி உள்ளது. இதே போன்ற மையங்கள் நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் பரவலாக தொடங்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தாமதமின்றி முன்னெடுக்க வேண்டும்!



