fbpx
Homeபிற செய்திகள்தமிழாக்குறிச்சி அணைக்கட்டில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள் ஆய்வு

தமிழாக்குறிச்சி அணைக்கட்டில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம், திடியூர் ஊராட்சி தாமிரபரணி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள தமிழாக்குறிச்சி அணைக்கட்டில் மேற்கொள்ளப்பட்ட நிரந்தர சீரமைப்புப் பணிகளை  தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் திட்ட இயக்குநர் தென்காசி சு ஜவஹர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் தமிழ்நாட்டில் 2017 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் நோக்கம் உற்பத்தி திறனை மேம்படுத்துதல், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப விவசாயம் செய்தல், நீர் மேலாண்மையை மேம்படுத்துதல், விவசாயிகள் மற்றும் விவசாய தொழில் முனைவோர்களுக்கு சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்துதல் ஆகும்.

இத்திட்டமானது தமிழ்நாடு அரசின் 7 துறைகளையும் 3 பல்கலைக்கழகங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவை நீர்வளத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகியனவாகும்.

தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மைச் சட்டம்                  2000 (எண். 7/2001) தமிழ்நாட்டின் 34 மாவட்டங்களில் 5173 நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் ஜனநாயக முறைப்படி மாவட்ட ஆட்சியர்களின் நேரடி பார்வையின் கீழ் நீர்வளத்துறை உதவியுடன் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இச்சங்கங்கள் எந்தவொரு அரசாங்க நிறுவனத்தையும் சார்ந்து இல்லாமல், கிடைக்கக்கூடிய நீர் ஆதாரங்களை திறமையாக நிர்வகிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன.

இதுவரை 2,626 ஏரிகள் 355 அணைக்கட்டுகள், 5,026 கிமீ நீளமுள்ள விநியோக வாய்கால்கள் மற்றும் 94 புதிய செயற்கை கிணறுகள் நீர்வளத்துறையின் மூலம் நீர்வள நிலவள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.                                      

இத்திட்டத்தின் கீழ் ரூ.2,006.25 கோடிகள் தற்போதுள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்பைச் சீரமைப்பதற்காகச் செலவிடப்பட்டு, 13 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான ஆயக்கட்டுப் பகுதி பயனடைந்துள்ளது. இதன் விளைவாக, 34 மாவட்டங்களில் உள்ள 14,44,849 விவசாயக் குடும்பங்களுக்கு மேம்பட்ட நீர்ப்பாதுகாப்பு மற்றும் விவசாய உற்பத்தித் திறன் மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உலக வங்கி உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் திட்ட இயக்குநர் தென்காசி ஜவஹர்  திருநெல்வேலி மாவட்டம் திடியூர் ஊராட்சி தாமிரபரணி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள தமிழாக்குறிச்சி அணைக்கட்டில் மேற்கொள்ளப்பட்ட நிரந்தர சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தார்.

80 மீ நீளம் கொண்டுள்ள இந்த தமிழாக்குறிச்சி அணைக்கட்டானது 1950 ஆம் ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலையின் முகப்பிலிருந்து உருவாகும் ஆற்றின் தோற்றத்திலிருந்து 27 கிமீ தொலைவில் தாமிரபரணி படுகையில் பச்சையாற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டு முக்கியமாக 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆயக்கட்டுப் பகுதியில் உள்ள தமிழாக்குறிச்சி குளத்திற்கு அதிகப்படியான வெள்ள நீரை திருப்பி விடுவதற்காக கட்டப்பட்டது. 

பச்சையாற்றின் குறுக்கே 12 அணைக்கட்டுகள், 2 தடுப்பணைகள் மற்றும் 2 மாற்று மதகுகள் உள்ளன. இந்த ஆறு தாமிரபரணியுடன் தருவை எனும் இடத்தில் சங்கமிக்கிறது. 

தமிழாக்குறிச்சி அணைக்கட்டு பச்சையாற்றின் குறுக்கே உள்ள கடைசி அணையாகும். 2023 ஆம் ஆண்டு வெள்ளத்தின்போது இந்த அணைக்கட்டு கடுமையாக சேதமடைந்தது.

இப்போது, இந்த முக்கியமான அணைக்கட்டு, உலக வங்கியின் உதவியோடு தற்செயல் அவசரநிலைப் பகுதியின் கீழ் ரூ.9.50 கோடி செலவில் சீரமைக்கப்பட்டடு நிரந்தரமாக பழைய நிலைக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளது. 

எதிர்கால வெள்ளத்தில் சேதம் ஏற்படாமல் பாதுகாக்க அணைக்கட்டின் நீளம் 120 மீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நிரந்தர சீரமைப்புப் பணிகள் 14.05.2024 அன்று தொடங்கி 31.10.2024 அன்று முடிவடைந்தது. இதனை ஒப்பந்தாரர் கருப்பசாமி  5 மாதங்களுக்குள் கட்டி முடித்துள்ளார்.

இந்நிகழ்வில்,  கண்காணிப்புப் பொறியாளர் பொறி.எஸ்.சிவக்குமார், நீர்வளத்துறை (தாமிரபரணி பேசின் வட்டம்) செயற்பொறியாளர் பொறி.எ.வசந்தி, உதவி செயற்பொறியாளர் பொறி ஆவுடையநாயகம், உதவி செயற்பொறியாளர் பொறி.தங்கராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img