தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் இணைந்து கூட்டு முயற்சி அடிப்படையில், 50:50 என்ற சமபங்கு வீதத்தில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் உருவாக்கப்பட்டு முதற்கட்ட மெட்ரோ பணிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ரூ.63,246 கோடி செலவில், 119 கிலோமீட்டர் நீளமுள்ள மேலும் மூன்று வழித்தடங்களைக் கொண்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டு மத்திய அரசின் அனுமதியும் இதற்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து 2021-22 நிதிநிலை அறிக்கையில் சென்னை மெட்ரோ பணிகளுக்கு மத்திய அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போதுவரை மத்திய அரசு சென்னை மெட்ரோ பணிகளுக்கு நிதி ஒதுக்காத நிலையில், தமிழ்நாடு அரசே முழு செலவையும் ஏற்றுக்கொண்டு மெட்ரோ பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவில் மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்குத் தேவைக்கு அதிகமான நிதியை மத்திய அரசு வாரி வழங்கியுள்ளது ஆர்டிஐ மூலம் அம்பலமாகியுள்ளது.
மும்பையில் 33.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு செயல்படுத்தப்படும் மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.23,136 கோடியாகும்.
இதில் மத்திய அரசின் பங்கு 16,662 கோடியாகும். ஆனால் மகாராஷ்டிரா மாநில அரசின் பங்கான ரூ.6,474 கோடியையும் சேர்த்து மத்திய அரசே ஒதுக்கி உள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.23,136 கோடி தேவையான நிலையில் 2,013 கோடி ரூபாயை கூடுதலாக மத்திய அரசு ஒதுக்கியது.
அதாவது, மும்பை 3ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.25,154 கோடியை மத்திய அரசு ஒதுக்கி அம்மாநில மக்களிடம் இருந்து சபாஷ் என வாழ்த்தை பெற்றுவிட்டது. இது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்.
ஆனால் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 1 ரூபாய் கூட ஒதுக்காத மத்திய அரசு, மும்பை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 151 சதவீதம் நிதி ஒதுக்கி இருப்பது தமிழ்நாட்டு மக்கள் மனதில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு புறக்கணித்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு மற்றொரு உதாரணமாகவே இது பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் தான், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து தமிழ்நாட்டின் நலன் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் பேசி இருக்கிறார்.
அப்போது அவர், பிரதமரிடம் முன்வைத்த முதன்மையான கோரிக்கையே சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்கித் தர வேண்டும் என்பது தான்.
இந்த கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு நிதி ஒதுக்கும் என்ற நம்பிக்கையோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பி இருக்கிறார்.
பிரதமருடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்ததாகவும் தெரிவித்து இருக்கிறார். பிரதமர் மோடியிடம் இருந்து நல்ல செய்தி வரும் என்று தமிழ்நாட்டு மக்களும் காத்திருக்கிறார்கள்.
ஒரு கண்ணில் வெண்ணெய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்பது வஞ்சனை செய்வோரை இடித்துரைத்து விமர்சிக்கும் நாடறிந்த பழமொழி. இதற்கு உதாரணமாகி விடாமல் மும்பை என்ற ஒரு கண்ணில் வெண்ணெய் வைத்தாற்போல சென்னை என்கிற இன்னொரு கண்ணில் வைத்த சுண்ணாம்பை அகற்றி விட்டு வெண்ணெய் வைக்குமா, மத்திய அரசு?
பிரதமர் மோடியின் கடைக்கண் பார்வை தமிழ்நாட்டுப் பக்கம் கொஞ்சம் திரும்பட்டும்!



