கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாவட்ட நிர்வாகமும் செய்தி மக்கள் தொடர்பு துறையும் இணைந்து நடத்தும் அரசுப் பொருட்காட்சியின் அரங்குகளை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார்,முன்னிலையில் நேற்று துவக்கி வைத்தனர். மேலும் 533 பயனாளிகளுக்கு ரூ.1,86,20,958 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.
கண்காட்சியில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பாக அமைக்கப்பட்ட அரங்குகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
பொருட்காட்சியில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு விதமான பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் நாள்தோறும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.எனவே அரசின் சார்பில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் நடைபெறும் இக்கண்காட்சியை அனைவரும் கண்டு களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வருவாய்துறை சார்பில் 68 பயனாளிகளுக்கு ரூ.43,03,040 மதிப்பீட்டில் பட்டாவிற்கான ஆணையும்,சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 70 பயனாளிகளுக்கு ரூ.10,87,500 மதிப்பீட்டில் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் முதியோர்,மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைக்கான ஆணையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.5,82,000 மதிப்பீட்டில் பெட்ரோல் எஸ்கூட்டர்களும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.26,760 மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரங்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.42,658 மதிப்பீட்டில் தையல் இயந்திரங்கள், சீர்மரபினர் நலவாரிய அட்டை மற்றும் கிறிஸ்துவ தேவாலய பணியாளர் நலவாரிய அட்டைகளும், மகளிர் திட்டம் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.1,25,79,000 மதிப்பீட்டில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் உதவிக்கான ஆணையும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 355 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும் என ஆக மொத்தம் 533 பயனாளிகளுக்கு ரூ.1,86,20,958 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள் நேற்று வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.விஷ்ணு பிரசாத்,கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைசெல்வன் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா மாநகராட்சி துணைமேயர் பா.தாமரைச்செல்வன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி),திட்ட இயக்குநர் இரா.சரண்யா, மாநகராட்சி ஆணையாளர் மரு.எஸ்.அனு ஆகியோர் கலந்து கொண்டனர்.



