நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் 388 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த 766 பயனாளிகளுக்கு ரூ.37.35 கோடி மதிப்பில் கடனுதவிகளை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ முன்னிலை வகித்தார். இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிபொறுப்பேற்றதும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்களை ரத்து செய்தார்கள். ஆண்களுக்கு நிகராக மகளிர்களும் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு கடனுதவிகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சர், நமது மாநிலத்தின் வளர்ச்சியை 2030-க்குள் 1 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்பதற்காக பல்வேறு நாடுகளுக்கு சென்று தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதன் மூலம் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. தற்போது கூட அமெரிக்கா சென்று பல்வேறு புதிய தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளார்.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடனுதவிகளை வைத்து தொழில் மேம்பாட்டிற்காக பயன்படுத்தி, அதன் மூலம் சுய உதவிக்குழு உறுப்பினர்களாகிய நீங்கள் மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கலாம்.
இந்நிகழ்ச்சியின் வாயிலாக 388 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 766 பயனாளிகளுக்கு ரூ.37.35 கோடி வங்கி கடனுதவிகள்வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ், 2 பயனாளிகளுக்கு இணை மானிய நிதியின்கீழ், தலா ரூ.4.90 லட்சம் மதிப்பில் கடனுதவிகளும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் மகளிர் திட்டம், தாட்கோ, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட தொழில் மையம், மாவட்ட முன்னோடி வங்கி, வாழ்ந்து காட்டுவோம் உள்ளிட்ட அரசுத்துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் காசிநாதன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் (பொ) திலகவதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன், உதவி திட்ட அலுவலர்கள் அருண்குமார், ஜெயராணி, சாந்தசீலன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர்வசந்த், ஊராட்சி ஒன்றியத்தலைவர்கள் மாயன் (எ) மாதன் (உதகை), ராம்குமார் (கோத்தகிரி), 6வது வார்டு உறுப்பினர் வனிதா, மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த மகளிர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



