கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில் தூய்மைப் பணியாளர் நலன் மற்றும் மறுவாழ்வு குறித்து, துறை அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் முன்னிலை வகித்தார்.
ஆய்வுக்கூட்டத்தில் தூய்மைப்பணியாளர்களுக்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பேரூராட்சித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை உள்ளிட்ட துறைகளின்கீழ் பணியாற்றிவரும் தூய்மைப்பணியாளர்களின் எண்ணிக்கை குறித்தும், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதிய விபரம் குறித்தும், அவர்களுக்காக செயல்படுத்தப்படும் சேமநல நிதி, காப்பீடு திட்டம் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தூய்மைப்பணியாளர்கள் பணிபுரியும்போது அவர்களுக்கு வழங்கப்படும் கையுறை, சீருடைகள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி பணிபுரிவது குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், ஒப்பந்த நிறுவனத்தின்கீழ் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு ஒப்பந்தத்தின்படி அவர்களுக்குண்டான சலுகைகள் உரிய காலத்திற்குள் வழங்கப்படுவது குறித்தும், பணிபுரியும் போது அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், ஒப்பந்தபணி துய்மை பணியாளர்களுக்கு மாத ஊதியம் பிரதி மாதம் 5ம் ந்தேதிக்குள் வழங்கிட வேண்டும். மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர், பேரூராட்சி, மற்றும் ஊராட்சித்துறை அலுவலர் அதனை உறுதி செய்திட வேண்டும். தாட்கோ சார்பில் தூய்மை பணியாளர்களை நல வாரியத்தில் சேர்த்திட நடவடிக்கை வழங்கிட வேண்டும்.
தேசிய தூய்மை பணியாளர் நிதியுதவி கழகத்தின் சார்பில் தூய்மை பணியாளர் வங்கி கடனுதவி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தூய்மை பணியாளர்களில் ஊதிய நிலுவைகளை விரைந்து வழங்கிட. வேண்டும்.
தொழிலாளர் நல அலுவலர் தூய்மை பணியாளர்கள் ஊதியத்தொகை சரியான நேரத்தில் அவர்களுக்கு வழங்கும் ஊதியத்தொகை அரசு நிர்ணயிக்கப்பட்ட தொகை வழங்கப்படுகிறதா? என ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஓப்பந்த நிறுவனத்தினார் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் தருவதை துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் அவர்களுக்கு முழுமையாக சென்றுசேர்வதை துறைசார்ந்த அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும் என தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வாணி ஈஸ்வரி, மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சண்முகவடிவேல், நகர்புற சுகாதார அலுவலர் இலட்சியவர்மன், துய்மை பணியாளர்கள், தொண்டு நிறுவனத்தினர் ,மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.



