fbpx
Homeபிற செய்திகள்கலைஞரின் பேனா சிலை!

கலைஞரின் பேனா சிலை!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு மெரினாவில் ரூ.39 கோடியில் நினைவிடம் கட்டப்பட்டுவருகிறது.அதோடு கலைஞர் கருணாநிதிக்கு கடலுக்குள் ரூ.80 கோடி மதிப்பில் பேனா சிலை வைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதற்கு அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதமும் அனுப்பியுள்ளது.

அந்த நினைவிடத்தில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு குறித்த நவீன ஒளிபடங்களும் அமைய உள்ளது. கருணாநிதியின் இந்த பேனா நினைவிடம் கடற்கரையில் இருந்து 360 மீட்டர் தொலைவில் கடலுக்குள் அமைக்கப்பட உள்ளது. இந்த நினைவுச் சின்னத்தை மக்கள் பார்வையிடும் வகையில் இரும்பு பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெற உள்ளது. கருணாநிதி நினைவிடத்தில் உள்ள பேனா சிலை 134 அடி உயரத்தில் அமைக்கப்பட உள்ளது.

இந்த பேனா சிலை தேவையா என சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆம்; தேவை தான். அதற்குப் பொருத்தமானவர் கலைஞர் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஏனென்றால் அவர் ஒரு பல்கலைக் கழகம். சிந்தனை, எழுத்து, பேச்சு, செயல் எல்லாம் இணைந்த ஓர் அற்புத – அதிசய கலவையாவார். எளிய குடும்பத்தில் பிறந்து உழைப்பால் உயர்ந்தவர் கலைஞர்.

அவரது அயராத உழைப்பும், தளராத தன்னம்பிக்கையும், ஆற்றல்மிகு ஆளுமைத் திறனும் அவரை எதிர்க்கட்சித் துணைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர், முதலமைச்சர் என்ற வரிசையில் உயர வைத்தது. திரைப்படத் துறையிலும் அவர் சாதனை படைத்தார்.

“என்னிடமிருந்து செங்கோலைக்கூட பறித்துக் கொள்ள முடியும்; ஆனால் எவரும், எந்த சக்தியும் எனது எழுதுகோலைப் பறித்துவிட முடியாது” என்று கலைஞர் சொன்னதை யாரும் மறக்க முடியாது.80 ஆண்டு பொது வாழ்க்கையில் அவர் எழுதாத எழுத்தில்லை; பேசாதப் பொருளில்லை. தமிழுக்கு “செம்மொழி” தகுதியைக் கொண்டு வந்தவர். பெண்களுக்குச் சொத்துரிமை, படிப்புரிமை, பணி உரிமை எல்லாம் தந்து சரித்திர நாயகனாக திகழ்பவர்.

இத்துணைச் சிறப்பு கொண்ட கலைஞரின் பேனாவுக்கு சிலை வைக்கத் தடை கோருவது ஏன்? இதில் அரசியல் வேண்டாம். மெரினாவில் வானுயர எழும்பி நிற்கப் போகும் கலைஞரின் பேனா சிலை இளைஞர்களுக்கும் வருங்கால சந்ததியினருக்கும் எழுத வேண்டும், வாசிக்க வேண்டும் என்ற உணர்வை ஊட்டிக் கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

எதற்கெடுத்தாலும் எதிர்க்கும் ஒரு கூட்டம் எப்போதும் இருக்கத்தான் செய்யும். அதனைப் புறந்தள்ளி கலைஞருக்கு பேனா சிலை நினைவுச் சின்னம் அமைக்கும் பணியை தமிழக அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img