இராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், அரசு நலத்திட்டங்களைப் பெற தகுதி உடையவர்களாக 18,571 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாற்றுத்திறனாளிகளின் தேவைகளின் அடிப்படையில் 55 வகையான நலத்திட்ட உதவிகள் பெற, விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு உடனுக்குடன் நலத் திட்ட உதவிகள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் அனைத்து விதமான தேவைகளையும், நலனையும் கருத்தில் கொண்டு பல்வேறு அரசு நலத்திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்.
மாற்றுத்திறனாளிகளின் தாய் தந்தையாகவும், பாதுகாவலராகவும் இருந்து வரும் தமிழக முதல்வர், மாற்றுத்திறனாளிகளின் சமூக பொருளாதார நிலையினை மேம்படுத்திட பல்வேறு புதுமையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கென தனியாக துறையை உருவாக்கி உள்ள நாட்டின் ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
மாற்றுத்திறனாளிகளுக்குள்ள தனிப்பட்ட திறமைகளைக் கருத்தில் கொண்டு அவர்களை உடல் ஊனமுற்றோர், குருடர், செவிடர் என்று அழைப்பதைத் தவிர்த்து அவர்கள் மீது சமுதாயம் கொண்டுள்ள கண்ணோட்டத்தை மாற்றுவதற்கென அவர்களை மாற்றுத் திறனாளிகள் என அழைக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அறிவித்தார்.
சமுதாயத்தில் ஒவ்வொரு நடவடிக்கையிலும் மாற்றுத்திறனாளிகள் சமமாக ஈடுபடுவதற்கு முழுவதுமாக உதவும் வகையில் தமிழக அரசு அவர்களுக்கென பல கொள்கைகளை வகுத்தும், திட்டங்களைத் தீட்டியும், அமல்படுத்தி வருகிறது.
அதன்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி, புதியதாக தொடங்கப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை களையவும், நலத்திட்ட உதவிகளையும், உதவி உபகரணங்களையும் எளிதில் பெற்றிடவும், மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்கள் அரசின் நலத் திட்டங்களை எவ்வித சிரமம் இன்றி எளிதில் பெறவும் வழிவகை செய்திட இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
கடந்த ஒரு வருடமாக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில், கொரோனா பெருந்தொற்று கால ஊரடங்கு காலத்தை தவிர்த்து மற்ற அனைத்து வாரங்களிலும் 44 சிறப்பு முகாம்கள் இது வரையில் நடத்தப்பட்டுள்ளன.
14,750 மாற்றுத்திறனாளிகள் இராணிப்பேட்டை மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். மேலும் வாராந்திர சிறப்பு முகாம்கள் மூலம் 3821 மாற்றுத்திறனாளிகள் இதுவரையில் கண்டறியப்பட்டு பயன் அடைந்துள்ளனர்.
ஆக மொத்தம் 18,571 மாற்றுத்திறனாளிகள் இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு நலத்திட்டங்களைப் பெற தகுதி உடையவர்களாக கண்டறியப்பட்டு அவர்களுக்கான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மருத்துவச் சான்றுடன் கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றிருந்தால், அரசின் அனைத்து நலத் திட்டங்களும் பெற தகுதியுடையவர் ஆகின்றனர்.
பல்வேறு மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள் கோரி மாவட்ட ஆட்சியரை அணுகும்போது, அடையாள அட்டை இல்லாத காரணத்தினால், நலத்திட்டங்கள் வழங்க இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது என்பதை அறிந்து இதனை உடனுக்குடன் வழங்கிடும் வகையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவவகத்திலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்துவிதமான பரிசோதனைகளும் மேற்கொண்டு உடனுக்குடன் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
மருத்துவச் சான்றுடன் கூடிய 10 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நாளது வரையில் 3821 மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 3409 மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
1650 மாற்றுத்திறனாளி களுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பதிவு செய்யப்பட்டுள்ளது. 628 மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாற்றுத்திற னாளிகளின் தேவைகளின் அடிப்படையில் 55 வகையான நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு உடனுக்குடன் நலத் திட்ட உதவிகள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை முதல்வர் அறிவித்த 1500 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்தியதன் அடிப்படையில் 1943 மூளை வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கும், 214 கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் 66 தொழு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும், 14 முதுகு தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளி களுக்கும், 31 தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் உயர் ஆதரவு தேவைப்படும் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 2000-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 2280 மாற்றுத்தினாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை வாராந்திர சிறப்பு முகாம்களின் மூலமாக கண்டறியப்பட்டு உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
அரசு மானியம் ரூ.10 லட்சம் ஒதுக்கீடு
இது மட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தார் பொருளாதார மேம்பாடு வேண்டி உதவி கேட்கும்பட்சத்தில் அவர்கள் சுயதொழில் செய்திட வங்கிகள் மூலம் மானியக் கடன் உதவிகள் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதில் 25 ஆயிரம் ரூபாய் அரசு மானியமாக வழங்குகிறது.
அதன் அடிப்படையில், இதுவரையில் 40 மாற்றுத்திறனாளிகளுக்கு 10 லட்சம் ரூபாய் அரசு மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வங்கி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
காது கேளாத 3 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு காக்ளியர் இம்ப்ளாண்ட் (Cochlear implant) அறுவை சிகிச்சையின் மூலம் செவித்திறன் குறைபாடு நீக்கப்பட்டு கேட்கும் திறன் கொண்டு வரப்படுகிறது.
இதற்கான அறுவை சிகிச்சை மற்றும் இயந்திரங்கள், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் ஏழை, எளிய மக்கள் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் இந்த இயந்திரத்தை முறையாக பராமரிக்காத காரணத்தினால் அடிக்கடி பழுது ஏற்பட்டு அவை செயலிழந்து விடுகின்றன.
இதனுடைய உதிரி பாகங்கள் அதிக விலை இருப்பதால் அதனை மீண்டும் வாங்கிப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதனால், குழந்தைகள் கேட்கும் திறனற்ற குறைபாட்டிற்கு மீண்டும் தள்ளப்பட்டுள்ளனர்.
இது போன்ற மாற்றுத்திறனாளிகள் முகாமில் வருகை தந்து அதற்கான உதவியை கேட்கின்றனர். இவர்களுக்கான சிறப்பு முகாம் தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் 25 காது கேளாத சிறார்கள் கண்டறியப்பட்டு அவர்கள் பயன்படுத்தி வந்த இயந்திரங்கள் மருத்துவ நிபுணர்களால் பரிசோதனை செய்யப்பட்டு தேவையான மாற்று ஏற்பாடுகளை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மேற்கொள்ள அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
இவர்களில் 5 பேருக்கு மாவட்ட ஆட்சித்தலைவரின் விருப்ப நிதியில் இருந்து உடனடியாக தலா ரூபாய் 1.46 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் உடனடியாக உதிரிபாகங்கள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
20 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முழு இயந்திரங்களும் தலா ரூ.5 லட்சத்திற்கு மேல் மதிப்புடைய புதிய இயந்திரங்கள் மாற்றிட அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, கை, கால்களை இழந்த மாற்றுத்திறனாளிக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் நவீன செயற்கை கை மற்றும் கால்கள் வழங்கிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 125 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டுள் ளனர். இவர்களில் 85 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவையங்கள் வழங்கப்பட்டு பயன் அடைந்துள்ளனர். 500 மாற்றுத்திறனா ளிகளுக்கு செயற்கை அவையங்கள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு அரக்கோணம் மற்றும் இராணிப்பேட்டை பகுதிகளில் முகாம்கள் நடத்தப்பட்டன.
மேலும் ஆற்காடு, கலவை, சோளிங்கர், நெமிலி ஆகிய பகுதிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு பயனாளிகள் கண்டறியப்பட உள்ளனர்.
பாதுகாவலர்களுக்காக
மாற்றுத்திறனாளிகளில் கை, கால்கள் இழந்தவர்கள், மன வளர்ச்சி குன்றியவர்கள், காது கேளாதோர், கடுமையான ஊனமடைந்த மாற்றுத்திறனாளிகள், பெற்றோர்கள் பொருளாதார ரீதியாக நிதி ஆதாரத்தை உருவாக்கி அவர்கள் பயன் பெறும் வகையில் சிறப்பு திட்டமாக தமிழத்திலேயே இராணிப்பேட்டை மாவட்டத்தில் 101 மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் மூலம் மஞ்சப் பைகளை தயாரித்து வணிக கடைகளுக்கு அவர்களாக விற்று பயனடையும் வகையில் பயிற்சி வழங்கப்பட்டு, தையல் இயந்திரங்கள் முதல்வரால் வழங்கப்பட்டன. இது மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்களுக்கு அரசு உறுதுணையாக இருப்பதை உறுதி செய்துள்ளது.
கேட்கும் திறன் கிடைத்தது
சோளிங்கர் ஒன்றியத்தைச் சேர்ந்த சிறுமி வேண்டா த\பெ பெருமாள் கூறியதாவது:
நான், என் மனைவி ராதா மகளுடன் பணவட்டாம்பட்டி கிராமம் சோளிங்கர் தாலுகாவில், கூலி வேலை செய்து வசித்து வருகிறோம்.
மகள் வேண்டா (வயது 6)வுக்கு கேட்கும் திறன் கிடையாது. மேல் சிகிச்சைக்கு உதவிடுமாறு மாவட்ட ஆட்சியரை அணுகினோம். 5 வயதிற்குள்ளாக அறுவை சிகிச்சை செய்து விட்டால், காது கேட்கும் திறன் கிடைக்கும். இதற்கான செலவு மருத்துவ காப்பீட்டு அட்டையில் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்கள்.
முதல் பரிசோதனைக்கு மாவட்ட ஆட்சியர் விருப்ப நிதியில் இருந்து உடனே வழங்கி பரிசோதனையை மேற்கொண்டார்.
செவி திறனற்ற என் மகளுக்கு காக்ளியர் அறுவை சிகிக்சையானது மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின்படி சிஎம்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு காதொலி கருவி பொருத்தப்பட்டுள்ளது.
தற்போது என் மகளுக்கு கேட்கும் திறன் கிடைத்துள்ளது. இவ்வுதவியை செய்த முதல்வர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு என் குடும்பத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
தொகுப்பு:
செ.அசோக்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
இராணிப்பேட்டை மாவட்டம்.



