இறால் மற்றும் மீன்வளர்ப்பு இயங்குதளமான அக்வா கனெக்ட் (Aquaconnect) தொழில்நுட்பம் மூலம், விவசாயிகளுக்கு தீவனம் மற்றும் இதர பண்ணை உள்ளீடுகள், உற்பத்தி, நிதி, மற்றும் காப்பீடு சார்ந்த சிக்கல்களை தீர்ப்பதோடு, அறுவடை செய்தபின் சந்தையில் விற்கவும் வழி செய்கிறது.
ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் டாவோஸுக்கு UMAGINE அமைப்பின் தலைமையில் செல்லும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஒரு பகுதியாக அக்வா கனெக்ட் சென்றுள்ளது. அங்கு தன் நிறுவனம் மூலம் மீன் மற்றும் இறால் விவசாயிகளுக்கு அளிக்கும் தொழில்நுட்பத் தீர்வுகளை காட்சிப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
2022 மே 22 முதல் மே 26 வரை நடைபெற உள்ள உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர சந்திப்பில், தமிழ்நாட்டிலிருந்து ஏழு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் டாவோஸுக்குச் சென்றன. அவற்றில் அக்வா கனெக்ட் நிறுவனமும் ஒன்று.
இந்தியாவில் மீன்வளர்ப்பு சார்ந்த நீலப் புரட்சியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதில் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை வழங்கும் இந்த நிறுவனம் டாவோஸில் UMAGINE அரங்கில் இடம்பெற்றுள்ளது.
அக்வா கனெக்ட் நிறுவனர், சிஇஓ ராஜமனோகர் சோமசுந்தரம் கூறுகையில், “உலகெங்கிலும் உள்ள முன்னணி நிறுவனங்களுடன் இந்தத் துறையில் எங்களின் கற்றல் அனுபவங்களையும், ஏற்படுத்திய தாக்கத்தையும் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது கண்டு மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறோம்” என்றார்.
மாநிலத்தின் தொழில்நுட்ப சூழலை மேம்படுத்துவதையும், தீவிரத் தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு சார்பில் துறைசார் நிறுவனங்கள் முன்னெடுத்துள்ள திட்டமே UMAGINE. தனது உச்சி மாநாடுகளை சென்னையில் ஆண்டுதோறும் நடத்த UMAGINE திட்டமிட்டுள்ளது.



