fbpx
Homeபிற செய்திகள்‘வாழ்க்கை உயர எத்தகைய வேலைவாய்ப்பு அவசியம்’ மாணவர்கள் சிந்திக்க அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுரை

‘வாழ்க்கை உயர எத்தகைய வேலைவாய்ப்பு அவசியம்’ மாணவர்கள் சிந்திக்க அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுரை

வாழக்கை உயர வேண்டும் என்றால் எவ்வகையான வேலைவாய்ப்பைப் பெறலாம் என்று மாணவர்கள் சிந்திக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.

இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

இரத்தினம் கல்விக் குழுத் தலைவர் முனைவர் மதன் ஆ.செந்தில் வரவேற்றார். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கி பேசியதாவது:

தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். வேலைவாய்ப்பு முகாமினால் அதிகளவில் பயன் பெறலாம். தமிழகத்தில் 82 புரிந்துணர்வு ஒப்பந்தம் வேலை பெறுவதற்காக போடப்பட்டுள்ளது.

ஏழை ஏளிய மக்கள் பயனுற வேண்டும் என்பதே அதன் நோக்கமாக உள்ளது. சமுதாயச் சிந்தனையோடு தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும். வாழ்க்கை உயர வேண்டும் என்றால் எவ்வகையான வேலைவாய்ப்பைப் பெறலாம் என்று மாணவர்கள் சிந்திக்க வேண்டும் என்றார்.

மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பேசுகையில், இளைஞர்கள் வேலைக்காக அலையக் கூடாது என்பதற்காக ஒரே இடத்தில் தனியார் துறை நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து நேர்காணல் முறையில் ஒரே நாளில் வேலைவாய்ப்பை பெற்றுவிடலாம் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.

மக்கள் தொகை பங்கீட்டு முறைப்படி இளைஞர்கள் அதிகளவில் உள்ளார்கள். இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதால், நாட்டின் வளர்ச்சி உயரும் என்றார்.

கோவை மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) ஓ.செ.ஞானசேகரன் திட்ட விளக்க உரையில், அனைத்து துறை சார்ந்த கல்வித் தகுதியினால் வேலைவாய்ப்பை பெறலாம் என்றார்.

கோவை மாநகர ஆணையர் ராஜகோபால் சுன்கரா பேசும்போது, முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பை பெறுதல் அவசியம் என்று குறிப்பிட்டார்.
முகாமில் 175-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு பெற்றன.

4000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்தனர். 5000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

இரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் ஆர். மாணிக்கம், கல்லூரி முதல்வர் ஆர். முரளிதரன், இரத்தினம் தொழில்நுட்ப வளாக முதல்வர் முனைவர் நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img