நாகாலாந்து மாநிலத்தில் உள்ள மோன் மாவட்டம் ஒடிங் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு நடந்த சம்பவத்தால் நாடே அதிர்ந்து போய் இருக்கிறது. பயங்கரவாதிகள் என்று கருதி அப்பாவி பொதுமக்கள் 14 பேரை பாதுகாப்பு படையினரே சுட்டுக்கொன்று விட்டனர்.
இறந்தவர்கள் அனைவரும் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள். பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர் ஒருவரும் இறந்துள்ளார். இதைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் நெய்ப்யூ ரியோ, உயர்மட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவம், இது ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு, இதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகக் கூறி உள்ளது. எனினும் சொந்த நாட்டு அப்பாவிகளை பாதுகாப்புப் படையினரே சுட்டுக் கொல்வது என்பது யதேச்சையாக நடந்திருந்தாலும் கண்டிக்கத்தக்கது.
கொல்லப்பட்ட அப்பாவிகள் கையில் ஆயுதங்கள் இல்லை. பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தவில்லை. சந்தேகத்தின்பேரிலாவது தொழிலாளர்கள் வந்த வாகனத்தை சுற்றி வளைத்து தடுத்து சோதனையிட்டு இருக்கலாம்.
அந்த வழியாக நிலக்கரி தொழிலாளர்கள் வழக்கம்போல வருவார்கள் என்ற உளவுத் தகவல் கூட பாதுகாப்பு படையினருக்கு தெரியாமல் போனது யாருடைய தவறு? பொதுவாக பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்; அதற்கு பதிலடி கொடுத்து அவர்களை பாதுகாப்பு படை சுட்டுக் கொன்றதாகத் தான் செய்திகள் அடிக்கடி வெளிவரும்.
நாகலாந்தில் அப்படி நடக்கவில்லை. ஆனாலும் தவறு நடந்து விட்டதே தவிர, அப்பாவிகளைக் கொல்ல வேண்டும் என்பது பாதுகாப்புப்படையினரின் நோக்கமல்ல. இதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அப்பாவிகள் பலியானது இதயத்தை நெருடுகிறது.
இந்த நாட்டில் மக்களும் பாதுகாப்பாக இல்லை; பாதுகாப்புப்படையும் பாதுகாப்பாக இல்லை. உள்துறை என்ன தான் செய்கிறது? என கேள்வி எழுப்பி உள்ளார்.
ஒருவகையில் துப்பாக்கில் சூட்டில் இறந்த அனைவரும் மறைமுகமாக நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்ததாகவே கருதப்படவேண்டும். வேறு என்ன சொல்ல முடியும்? உயர்மட்டக்குழு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உரிய நீதியும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிகபட்ச நிவாரணமும் கிடைக்கச் செய்ய வேண்டும்!



