சேலம் மாவட்டத்தில், தற்போது வரை 1,80,133 எக்டர் பரப்பளவில் நெல், கரும்பு, பருத்தி, சிறுதானியங்கள், பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவ மழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வரும் சூழ்நிலையில், சேலம் மாவட்டத்திலும் தற்போது பெறப்பட்டுள்ள மழையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முதல்வர் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய ஏதுவாக கடந்த 12.06.2021 அன்று மேட்டூர் அணையினை திறந்து வைத்தார்.
மேட்டூர் அணை வரலாற்றில் 41-வது முறையாக தற்போது, மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.
அதேபோன்று மேட்டூர் அணையிலிருந்து 44- வது முறையாக உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
அதிக மழை
குறிப்பாக சேலம் மாவட்டத்திற்கு கிடைக்க வேண்டிய தென்மேற்கு பருவமழை சராசரியாக 440.60 மி.மீ. ஆகும். தற்போது 540.54 மி.மீ. மழை கிடைக்கப் பெற்றுள்ளது.
இது தென்மேற்கு பருவ மழையில் கிடைக்க வேண்டிய சராசரி மழை அளவை விட 100 மி.மீ. அளவு அதிகமாகும்.
சேலம் மாவட்டத்திற்கு கிடைக்க வேண்டிய வடகிழக்கு பருவமழை (அக்டோபர், நவம்பர், டிசம்பர்) 370.50 மி.மீ. ஆகும். இதில் 13.11.2021 வரை 360.03 மி.மீ. மழை அளவு பெறப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மீதமுள்ள நீர்நிலைகளும் நிரம்பும் நிலையில் உள்ளன.
சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் 3 நீர்நிலைகள், ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் 276 நீர்நி¬ லகள், பேரூராட்சிகளின் கட்டுப்பாட்டில் 44 நீர்நிலைகள், பொதுப் பணித்துறை (மேட்டூர் அணைக் கோட்டம்) கட்டுப்பாட்டில் 18 நீர்நிலைகள், பொதுப்பணித்துறை சரபங்கா கட்டுப்பாட்டில் 89 நீர்நிலைகள் என மொத்தம் 430 நீர்நிலைகள் உள்ளன.
நீர்நிலைகள்
இவற்றில் தற்போது வரை 60 நீர்நிலைகள் முழுமையாக நிரம்பியுள்ளது. 49 நீர் நிலைகள் 75 சதவீதமும், 35 நீர்நிலைகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளது.
தொடர்ச்சியாக பெய்துவரும் பருவ மழையையொட்டி மாவட்டத்தில் மீதமுள்ள நீர்நிலைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகின்றது.
நடப்பு ஆண்டில் சேலம் மாவட்டத்தில், தற்போது வரை 1,80,133 எக்டர் பரப்பளவில் நெல், கரும்பு, பருத்தி, சிறுதானியங்கள், பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர தோட்டக் கலை துறையின் சார்பில் பழங்கள், காய்கறிகள், வாசனை திரவியங்கள், மலைப்பயிர்கள் என 60,949 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது பெய்துவரும் பருவ மழையால் சேலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளன. இதனால் இந்த ஆண்டு பயிர் சாகுபடி விளைச்சல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பாக அமைந்துள்ளதால், கோடைகாலங்களில் சேலம் மாவட்டத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்திட தற்போது பெய்து வரும் பருவமழை பேருதவியாக அமைந்துள்ளது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், ஜங்கமசமுத்திரம் ஏரி முழுமையாக நிரம்பியுள்ளதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
ஆய்வின் போது ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சா.சரண்யா, இணை இயக்குநர் (வேளாண்மை) க.கணேசன் உள்ளிட்ட அலுவ லர்கள் உள்ளனர்.



