ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் 39-வது பேரவைக் கூட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் புதூர் கலைமணி தலைமை வகித்து பேசியதாவது:
ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் 27.01.1982-ல் பதிவு செய்யப்பட்டு 20.04.1982-ல் தனது சீரிய பணியினை துவக்கியது.
31.03.2021-ம் தேதியுடன் ஒன்றியம் தனது 39-வது ஆண்டை நிறைவு செய்துள்ளது.
ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியம், மாவட்டத்தில் கூட்டுறவு விளம்பரம் மற்றும் பிரச்சாரம், கூட்டுறவு கல்வி, கூட்டுறவு பயிற்சி ஆகிய பணிகளை செயல்படுத்துகிற மாவட்ட அளவிலான அமைப்பாகும்.
இவ்வமைப்பு மூலம் இம்மாவட்டத்தில் கூட்டுறவு இயக்கம், முறையான வளர்ச்சி பெறவும், வளமான சூழ்நிலையினை உருவாக்கவும், திறம்பட பணியாற்றி வருகிறது.
கூட்டுறவு இயக்கம் குறித்து பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையே ஓர் தொடர்பு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதனை திறம்பட செயலாற்றி வருகிறது.
ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு ஒத்துழைத்த அனைத்து உறுப்பினர் சங்கங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் நா.வடிவேல் வரவேற்றார். இயக்குனர் எம்.கருப்பண்ணன் நன்றி கூறினார்.
மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் இயக்குநர்களும், அனைத்து வகையான கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



