தர்மபுரி உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ளது. ரூ.6 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு மாநில பாமக துணைப் பொதுச் செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி.டாக்டர் செந்தில், முன்னாள் எம்.எல்.ஏக்கள் இல.வேலுசாமி, பாரி மோகன், மாநில துணைத் தலைவர்கள் பாடி செல்வம், சாந்தமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் பெரியசாமி, செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதுப்பிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் மழைப்பொழிவு குறைந்து வருவதால் இங்கு உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன.
இதனை போக்க காவிரி உபரி நீர் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்க சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க பணியை உடனே தொடங்க வேண்டும்.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகளை கட்டி நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பாமகவினர் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டிக்கிறோம்.
இந்த தாக்குதலில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மாநில நிர்வாகிகள் அரசாங்கம், மாது, முருகசாமி, வாசு நாயுடு, ஒன்றியக்குழு தலைவர்கள் மகேஸ்வரி பெரியசாமி, கவிதா ராமகிருஷ்ணன்,ஒன்றிய கவுன்சிலர் சோனியா வெங்கடேசன், மாவட்ட நிர்வாகிகள் சண்முகம், சின்னசாமி, சுப்பிரமணியன், பாலகிருஷ்ணன், நாகராஜன், காமராஜ்,மனோகரன்,நகர செயலாளர்கள் சத்தியமூர்த்தி, வெங்கடேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அலுவலக மேலாளர் தமிழரசு நன்றி கூறினார்.



