கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் ஹில்குரோ ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளது.
மேலும்,ஹில்குரோ ரயில் நிலையம் அருகில் பாறை மற்றும் மண் சரிந்து விழுந்து ரயில் பாதையை மூடி உள்ளது. இந்த நிலையில் நேற்று மேட்டுப்பாளையத்திலிருந்து 180 பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டு சென்றது.
கல்லார் ரயில் நிலையத்தை கடந்து ரயில் சென்று கொண்டிருந்த பொழுது ரயில் முன் பெட்டியில் அமர்ந்திருந்த பிரேக் மேன் மரம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டு ரயில்பாதை முழுவதுமாக மூடி இருந்ததை பார்த்து உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு அளித்த தகவலின் பேரில் மலை ரயில் மீண்டும் கல்லாறு ரயில் நிலையத்திற்கு திரும்பி வந்தது. பயணிகள் அனைவரும் கல்லாறில் இருந்து உதகைக்கு பேருந்து மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். பலர் தங்களது சொந்த வாகனங்களில் உதகைக்கு சென்றனர்.
ஆர்வமுடன் இயற்கை அழகை ரசித்து உதகை செல்லலாம் என்று மலை ரயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் ஏமாற்ற மடைந்தனர்.
மேலும்,மண் சரிந்த இடத்தில் ரயில்வே ஊழியர்கள் சீர் செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இன்று மலை ரயில் போக்குவரத்தை ரத்து செய்வதாக ரயில்வே வட்டா ரங்கள் தெரிவித்துள்ளன.



