காந்தியமும் இன்றைய சமுதாயமும் எனும் தலைப்பில் தொடர்ந்து 14 மணிநேரம் இணையவழி கருத்தரங்கு நடத்தி, உலக சாதனை புத்தகத்தில், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம் இடம்பெற்றுள்ளது.
கொரோனா கால பேரிடர் காலத்தில், கல்வி, வர்த்தகம், தினசரி பணிகள், வங்கி பரிவர்த்தனை, கருத்தரங்குகள் போன்ற சமூகத்தின் முக்கிய நிகழ்வுகள் இணைய வழியாக நடந்து வருவது தற்போது அதிகரித்துள்ளது.
இந்நிலையில்,இணைய வழியாக தொடர்ந்து 14 மணிநேரம் கருத்தரங்கு நடத்தி, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் நோபல் உலகச்சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாளை, அகிம்சை தின விழாவாக கொண்டாடும் விதமாக காந்தியமும் இன்றைய சமுதாயமும் எனும் தலைப்பில் இணைய வழி கருத்தரங்கு நடந்தது.
துறைத் தலைவர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிந்து வரவேற்றார்.
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வைதேகி விஜயகுமார் சிறப்புரையாற்றினார். பதிவா ளர் ஹில்டா தேவி, தொடக்க உரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக, கோவை மாநகர காவல்துறை ஆணையர் தீபக் வி.தாமோர் கலந்து கொண்டு, நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக நடைபெற்ற கருத்தரங்கை துவக்கி வைத்தார்.
இதில் ஐ.ஐ.சி.சி.ஐ. குளோபல் பிரசிடென்ட் முகம்மது சிராஜ் அன்சாரி பெண்கள் மேம்பாடு குறித்து பேசினார்.
தொடர்ந்து 14 மணி நேரம் இணைய வழியாக சுமார் ஐநூறு பேர் கருந்தரங்கில் கலந்து கொண்டனர்.
பெண்கள் மேம்பாடு, புற்றுநோய் விழிப்புணர்வு, மன ஆரோக்கியம் மற்றும் அதன் முக்கியத்துவம் ,நுகர்வோர் பாதுகாப்பு, குடும்ப வன்முறை வரதட்சணைக் கொடுமை, மனித உரிமை, இயற்கை விவசாயம் என சமுதாய மேம்பாடு சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி பத்மாவதி நன்றி கூறினார்.
காலை 8 மணிக்கு துவங்கி இரவு 10 மணி வரை தொடர்ந்து நடைபெற்ற இணைய வழிக் கருத்தரங்கை, நோபல் சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் தியாகுநாகராஜ் நோபல் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்தார்.



