கோவை மாவட்டத்தில் வரும் 12ம் தேதி 1,500 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாகவும், இதில் 1.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் அவர் பேசியதாவது: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் மிக முக்கியமானது அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது. கோவையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அனைவருக்கும் தடுப்பூசி எளிதில் கிடைக்கும் விதமாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை உள்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணிநேர தடுப்பூசி மையம் திறக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் வரும் 12ஆம் தேதி மாபெரும் சிறப்பு கொரோனா முகாம் நடைபெற உள்ளது.
அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், நோய் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ள பகுதிகள், போக்குவரத்து வசதியற்ற பகுதிகள், மலைப்பகுதிகள், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
இந்த முகாம்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும்.
மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும், 2ஆம் தவணைக்கு காத்திருப்பவர்களும் இச்சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாவட்டம் முழுவதும் 1500 மையங்கள் அமைத்து 1.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்ட மிடப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக் கரே சுபம் ஞானதேவ்ராவ், உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



