fbpx
Homeபிற செய்திகள்‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் வயதானவர்களுக்கு வாழ்வளிக்கிறது - தன்னம்பிக்கை ஊட்டிய முதல்வருக்கு நன்றி!

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் வயதானவர்களுக்கு வாழ்வளிக்கிறது – தன்னம்பிக்கை ஊட்டிய முதல்வருக்கு நன்றி!

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்”

நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு ஒப்ப, தமிழக முதல்வராக பதவியேற்று, மக்களின் நலனுக்காகவே அர்ப்பணித்து, சிறப்பாக பணியாற்றி, நல்லாட்சியை மக்களுக்கு வழங்கி கொண்டிருக்கக் கூடிய முதல்வர், தொடங்கி வைத்த திட்டம் தான் ‘மக்களைத் தேடி மருத்துவம்’.

தொற்றா நோயாளிகளின் தன்மை அறிந்து, அவர்களின் அலைச்சலையும், மன உளைச்சலை தவிர்க்கும் வண்ணம், தொற்றா நோய்களின் சுமையை எதிர்கொள்ளும் விதமாக நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று சில அத்தியாவசியமான சுகாதாரச் சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், இந்தியாவிலேயே முதன் முறையாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற உன்னதமான திட்டத்தை அறிமுகப்படுத்தி, கடந்த 5-ம் தேதி தொடங்கி வைத்தார்.

முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டம், விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று தொற்றா நோய்களான நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனைகளை செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறைச் சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம் ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவச் சேவைகளை, நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலம் பரிசோதனை செய்து பட்டியலிடப்பட்ட நோயாளிகளில் 45 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கான மருந்துகளைக் களப்பணியாளர்கள் இல்லங்களுக்கே சென்று வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவச் சேவைகள், சிறுநீரக நோயாளிகளைப் பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவச் சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளைக் கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்குத் தேவையான அனைத்து சுகாதாரத் தேவைகளையும் வழங்குகிறது.

இத்துடன் தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சமுதாய நலப் பதிவேட்டில் ஒவ்வொரு நோயாளி பற்றிய குறிப்புகளையும் பதிவு செய்து தொடர்ந்து கண்காணித்து வகைப்படுத்துவது இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகும்.

இத்திட்டத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் பயிற்சி பெற்ற பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள், இடைநிலைச் சுகாதாரச் சேவையாளர்கள், இயன்முறை மருத்துவர்கள், நோய் ஆதரவுச் செவிலியர் ஆகியோர் பங்கு பெறுவர்.

பொது சுகாதாரத் துறையின் களப்பணியாளர்கள் இக்குழுவினரின் செயல்பாடுகளைக் கண்காணித்து வழிநடத்துவார்கள். இத்திட்டத்திற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் பயனாளிகளின் சேவைக்காக ஏற்படுத்தப்படவுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில், நரிக்குடி, காரியாபட்டி, சாத்தூர், வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு ஆகிய பின்தங்கிய வட்டாரங்களில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மூலம், அனைவருக்கும் நல்வாழ்வு திட்டத்தின் கீழ், இந்த வட்டாரங்களில் உள்ள நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் ஆகிய தொற்றா நோய் உள்ளவர்களுக்கு, அந்த வட்டாரங்களில் உள்ள துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம், மருத்துவரின் பரிந்துரையின்படி முதல் மாத காலத்திற்கான மருந்துகள் வழங்கப்படும்.

பின்னர் சம்மந்தப்பட்ட துணை சுகாதார நிலையங்களில் மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் நோயாளிகளின் இல்லங்களுக்குச் சென்று சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகளைச் செய்து, இரண்டு மாதங்களுக்கான மருந்துகள் வழங்குவர்.

ஏதேனும் உடல்நலத்தில் மாற்றம் இருப்பின் இ-சஞ்சீவினி செயலியின் மூலம் மருத்துவ அலுவலரின் ஆலோசனை வழங்கப்படும். ஏதேனும் தேவை இருப்பின் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்படும்.

இதற்கென ஒரு துணை சுகாதார நிலையத்திற்கு, ஒரு மகளிர் சுகாதார தன்னார்வலர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு வட்டாரத்திற்கு இயன்முறை சிகிச்சையாளர் மற்றும் செவிலியர் ஆகியோரை உள்ளடக்கிய மருத்துவ வாகனம் மூலம் நடமாட முடியாத நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று தேவையான சிகிச்சை வழங்குவார்கள்.

நடமாட முடியாத நோயாளிகள் மற்றும் மருத்துவமனைக்கு நேரில் வர முடியாதவர்கள், மருத்துவமனைகள் தொலைவில் உள்ள பகுதி மக்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மிகவும் பயனுள்ள திட்டம்.

படிக்க வேண்டும்

spot_img