Homeபிற செய்திகள்11,719 மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஓராண்டில் 2632 குழுக்களுக்கு ரூ.171.31 கோடி கடனுதவி வழங்கல்

11,719 மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஓராண்டில் 2632 குழுக்களுக்கு ரூ.171.31 கோடி கடனுதவி வழங்கல்

கோவை மாவட்டத்தில் மொத்தம் 11,719 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஓராண்டில் 2632 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.171.31கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், சுய உதவிக் குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுய சார்புதன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் ஆகிய மூன்று முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழக அரசு தர்மபுரி மாவட்டத்தில் பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி உதவியுடன் வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த மகளிரைக் கொண்டு மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுக்களை அமைக்கத் தொடங்கியது.

தமிழ்நாடு அரசு பெண்கள் வாழ்வினில் மறுமலர்ச்சி அடையச் செய்யும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அவற்றில் குறிப்பாக மகளிர் திட்டத்தின் மூலம் சுழல் நிதி வழங்குதல், சுயதொழில் கடனுதவி திட்டங்கள், வட்டி மானியம் வழங்குதல், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை மற்றும் மிகவும் ஏழ்மையான மக்கள் பங்கேற்புடன் கண்டறிந்து அவர்களில் மகளிர் சுய உதவிக் குழுவில் இதுவரை இணையாதவர்களை ஒருங்கிணைத்து குழுக்களாக அல்லது புதியகுழு அமைத்தல், கிராமப்புற ஏழைகளுக்கான வலுவான, மக்கள் அமைப்புகளை உருவாக்கி, அவற்றை நிலைத்த தன்மையுடன் செயல்பட வைத்தல், சேமிப்பு பழக்கத்தை உருவாக்குதல், நிதித்தேவைகளை சுயமாக பூர்த்திசெய்தல், தொழில் செய்து குடும்பப் பொருளாதார நிலையை உயர்த்துதல், அரசு வழங்கும் கடன் உதவிகளைப் பெற்று பயன் அடைதல், இலாபம் தரக்கூடிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் குடும்ப வருமானத்தை உயர்த்தி, வறுமையிலிருந்து விடுபடச் செய்து, வாழ்க்கை தரத்தை மேம்படுத்துதல், பெண்களிடையே அறிவுத்திறன், எழுதும்திறன், வாசிக்கும் திறன் வளர்த்தல், தலைமைத்துவப் பண்புகளை வளர்த்தல், நடைமுறை வாழ்க்கைக் கல்வியைக் கற்று தருதல், சுய தொழிலுக்கான தொழில் திறன் பயிற்சி அளித்தல், பெண்கள் பெயரில் சொத்துக்களை உருவாக்குதல், கணக்குப் பதிவேடுகளைப் பராமரிக்கும் திறனை உருவாக்குதல் போன்ற பல்வேறு உதவித் திட்டங்கள் மற்றும் தனித்திறன்களை வெளிக்கொணர்வதின் மூலம் சமுதாயத்தில் பெண்கள் சுயசார்பு நிலையினை பெற இயலும்.

சுய உதவிக்குழுக்கள் ஏற்படுத்திட ஒரே கிராமம் (அ) ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள்/ வசிப்பவர்களாக இருத்தல் வேண்டும். 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 12 நபர் முதல் 20 மகளிர் வரை உறுப்பினர்களாக இருக்கலாம். விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.

மாற்றுத்தி றனாளிகளை தகுதி அடிப்படையில் சுய உதவிக் குழுவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளிகள் குறைவாக இருப்பார்களேயானால் சிறப்புக் குழுக்களாக 5 நபர்களை கொண்டு குழு அமைத்துக் கொள்ளலாம்.

உறுப்பினர்களை அவர்கள் செலுத்தும் சந்தா தொகைகள் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது. கோவை மாநகராட்சியில், 2016 மகளிர் சுயஉதவிக்குழுக்களும், நகராட்சி பகுதிகளில் 504 மகளிர் சுயஉதவிக்குழுக்களும், பேரூராட்சி பகுதிகளில் 996 மகளிர் சுயஉதவிக்குழுக்களும், ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 8,203 மகளிர் சுயஉதவிக்குழுக்களும் என மொத்தம் 11,719 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் அன்னூர் வட்டாரத்தில், 152 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.10.76 கோடி கடனுதவியும், கிணத்துக்கடவு வட்டாரத்தில் 185 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.13.02 கோடி கடனுதவியும், ஆனைமலை வட்டாரத்தில் 108 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.7.07 கோடி கடனுதவியும், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் 104 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.7.14 கோடி கடனுதவியும், காரமடை வட்டாரத்தில் 194 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.14.92 கோடி கடனுதவியும், எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில் 72 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4.50 கோடி கடனுதவியும், பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் 108 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.7.21 கோடி கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் 153 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.9.06 கோடி கடனுதவியும், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் 84 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5.18 கோடி கடனுதவியும், சூலூர் வட்டாரத்தில் 95 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.6.04 கோடி கடனுதவியும், சுல்தான்பேட்டை வட்டாரத்தில் 107 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.6.10 கோடி கடனுதவியும், மதுக்கரை வட்டாரத்தில் 51 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2.79 கோடி கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் 680 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.43.12 கோடி கடனுதவியும், நகராட்சி பகுதிகளில் 199 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.13.87 கோடி கடனுதவியும், பேரூராட்சி பகுதிகளில் 340 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20.53 கோடி கடனுதவி என மொத்தம் கோவை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 2632 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.171.31 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

குழுவில் சேர்ந்தேன் தொழில் அதிபரானேன்
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், மத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கி.பொற்செல்வி தெரிவித்தாவது:
கணவர்‌ விவசாயம்‌ செய்து வருகிறார்‌.

இரண்டு பெண்‌ குழந்தைகள்‌ உள்ளன. குடும்பத்திற்கு எவ்வித மாத வருமானமும்‌ இல்லை. விவசாயத்தில்‌ வருமானம்‌ தொடர்ந்து கிடைப்பதில்லை. கிடைக்கும்‌ வருமானத்தை வைத்து குடும்ப செலவு குழந்தைகளின்‌ கல்வி கவனிப்பதில் சிரமம் இருந்ததால், வறுமையில்‌ இருந்தேன். ‌

பின்னர் வெள்ளி நிலா மகளிர்‌ சுய உதவிக்குழு 13 நபர்களில் நானும் ஒருவராக சேர்ந்தேன்‌. வாரத்திற்கு ஒரு முறை ரூ.25 சேமிப்புடன்‌ துவங்கி, தற்போது மாதம்‌ ரூ.500 வரை ஒரு நபரின்‌ சேமிப்பு வங்கியில்‌ செலுத்துகின்றோம்.

பாக்குமட்டை தட்டு தயாரிக்கும்‌ தொழில்‌ பயிற்சி கணபதியில்‌ உள்ள தனியார் நிறுவனத்தில்‌ 7 நாட்கள்‌ மகளிர்‌ திட்டத்தின்‌ மூலமாக வழங்கப்பட்ட பயிற்சியில் பங்கேற்றேன்‌. மண்டல ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனத்தில்‌ (பவானிசாகர்) மகளிர்‌ திட்டம்‌ மூலம்‌ தொழில்‌ முனைவோர்‌ பயிற்சியில்‌ கலந்து கொண்டேன்‌.

குழுவிற்கு வழங்கப்பட்ட வங்கி நேரடிக்‌ கடன்‌ மற்றும்‌ சொந்த பங்களிப்புடன்‌ பாக்குமட்டை தட்டு தயாரிக்கும்‌ இயந்திரம்‌ வாங்கி, தொழில்‌ செய்ய ஆரம்பித்தேன்‌. மகளிர்‌ திட்டம்‌ மூலம்‌ நடத்தப்பட்ட கல்லூரி சந்தைகளுக்கு விற்பனைக்கு சென்றேன்.‌

அங்கு வியாபாரத்தைப் பெருக்கிக்‌ கொண்டேன்‌.
பாக்குமட்டை தட்டுகளுக்கு திருமணம்‌ கோவில்‌ விசேஷங்கள்‌ மற்றும் சூப்பர்‌ மார்க்கெட்களிலிருந்தும்‌ ஆர்டர்கள்‌ கிடைக்கின்றன. தினமும்‌ 500 முதல்‌ 600 தட்டுகள்‌ உற்பத்தி செய்கிறோம்‌.

மாதத்திற்கு ரூ.45,000 முதல்‌ ரூ.52,000 வரை வருமானம்‌ கிடைக்கிறது. இதர செலவுகள்‌ போக ரூ.10,000 முதல்‌ ரூ.12,000 வரை லாபம்‌ கிடைக்கிறது. குடும்ப வாழ்வாதாரம்‌ முன்னேற்றமடைந்துள்ளது.‌ வாய்ப்பை வழங்கிய முதல்வருக்கு நன்றியினை தெரிவித்துக்‌ கொள்கிறேன் என்றார்‌.

இருவருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறேன்
கோவை மாவட்டம், பெரிய நாயக்கன்பாளையம்‌ ஒன்றியம், ரங்கம்மாள் பகுதியைச் சேர்ந்த சுமதி தெரிவித்ததாவது:
நான்‌ ஒரு மாற்றுத்திறனாளி. எனது தாயார்‌ வீடு, வீடாக சென்று துணி வியாபாரம்‌ செய்தார்‌.

வயது மூப்பின்‌ காரணமாக தாயார்‌ துணி வியாபாரம்‌ செய்வதில்‌ சிரமம்‌ ஏற்பட்டது. வருமானம்‌ இன்றி வறுமையில்‌ இருந்தோம்‌. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்‌ கீழ்‌ அசோகபுரம்‌ ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின்‌ மூலம்‌ பிரம்மபுத்திரா மாற்றுத்திறனாளிகள்‌ சிறப்பு சுய உதவிக்குழு துவக்கப்பட்டதை அறிந்தேன்.

அக்குழுவின் ஊக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டு, குழுவானது சிறப்பான முறையில்‌ நடத்தப்பட்டு வருகிறது.
ஆரம்பகால கட்டத்தில்‌ மாத சேமிப்பு 100 ரூபாயிலிருந்து தற்சமயம்‌ ரூ.250 சேமித்து வருகிறோம்‌.

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிலிருந்து சமுதாய முதலீட்டு நிதியாக ரூ.75,000 வரை கடன்‌ பெற்று துணி வியாபாரம்‌ மற்றும்‌ தையல்‌ தொழிலுக்கென தனியாக கடை அமைத்து சொந்தத்‌ தொழில்‌ செய்து வருகிறேன்‌.

2 பெண்களுக்கு வீட்டிலிருந்தே துணி தைத்து கொடுக்க வேலைவாய்ப்பும்‌ அளித்து வருகிறேன்‌. வியாபாரத்தை பெருக்கிக்கொள்ள மகளிர்‌ திட்டம்‌ மூலம்‌ ஏற்படுத்தி கொடுக்கும்‌ இடங்களில் கலந்து கொள்வதால்‌ வியாபாரத்தில்‌ முன்னேற்றம்‌ அடைந்துள்ளேன்‌.

எனக்கு தற்போது மாத வருமானம்‌ ரூ.10,000 முதல்‌ ரூ.12,000 வரை கிடைப்பதால்‌ குடும்ப வாழ்வாதாரம்‌ மேன்மை அடைந்துள்ளது. ‌மகளிர்‌ திட்டத்தின் மூலம் இந்தவாய்ப்பை வழங்கிய முதல்வருக்கு நன்றியினை தெரிவித்துக்‌ கொள்கின்றேன் என்றார்‌.

தொகுப்பு:
ஆ.செந்தில் அண்ணா,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
கி. மோகன்ராஜ்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர்
கோயம்புத்தூர் மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img