இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் ஓர் அங்கமான கோயம்புத்தூர் கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் தனது 114வது நிறுவன தினத்தினை கொண்டாடியது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு வாரியத்தின் தலைவர் முனைவர் சஞ்சய் குமார் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். இதில் அவர் 113 ஆண்டுகளாக தனது பாரம்பரியத்தை நிலைநிறுத்தி வரும் கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் சாதனைகளை பாராட்டினார்.

இந்தியாவில் பயிரிடப்படும் கரும்பு சாகுபடி பரப்பளவில் 80%‑க்கும் மேற்பட்டது இந்த நிறுவனத்தின் கோ கரும்பு இரகங்களே எனவும் அவர் குறிப்பிட்டார்.
புது தில்லியில் உள்ள தேசிய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் இராமன் தங்கவேலு பேசுகையில், “தேசிய மற்றும் உலக அளவில் கரும்பு இனப்பெருக்க மேம்பாட்டில் கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் பங்களிப்பு அளப்பரியது என்றும் குறிப்பிட்டார்.

தலைமை உரை ஆற்றிய கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் பெ கோவிந்தராஜ், கடந்த ஆண்டு, நாட்டின் வடமேற்கு மண்டலத்திற்காக மத்தியகால இரகமான கோ 17018 என்ற இரகம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் , நாட்டின் பல பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு 3,000 டன்களுக்கும் மேலான தரமான விதைகரணைகளை வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.
முன்னதாக, தலைமை விருந்தினர், நிறுவனத்தின் புதிய வெளியீடுகளை வெளியிட்டு, நிறுவன தின பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்வில் கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்கள் உட்பட 300‑க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.



