முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் உடன் சென்ற 13 பேர் உயிரிழந்த இந்த விபத்து தொடர்பாக தற்போது நாடாளுமன்றத்தில் ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்த்தார்.
இதற்கு முன்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உயிரிழந்த வர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தற்போது இந்த விபத்து தொடர்பாக முதற்கட்ட அறிக்கை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சார்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக அவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மவுன அஞ்சலி, பின்னர் நாடாளுமன்றத்தில் இதுகுறித்த ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரத்தினை அதிகாரப் பூர்வமாக அறிவிக் கப்பட்டது. முப்படைகளின் தலைமை தளபதியாக முதன் முறையாக நியமிக் கப்பட்ட பிபின் ராவத், அவருடைய மனைவி உயிரிழந்துள்ளனர்.
இவர்களை தவிர்த்து மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் வருண் சிங் என்ற கேப்டன் மட்டும் தான் உயிர் பிழைத்துள்ளார். தொடர்ந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிபின் ராவத் மற்றும் அவருடன் பாதுகாப்பிற்காக சென்ற அதிகாரிகள் மற்றும் சூலூர் விமான படையில் இருந்து சென்ற 4 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் உடல் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மைய வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு அஞ்சலி செலுத்தக்கூடிய நிகழ்வு நடந்து வருகிறது. ராணுவ பயிற்சி மையத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியதும் முதல் அலுவலாக இந்த பணி நடைபெற்றது. மக்களவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நடந்த விபத்து குறித்த விவரங்களை அளித்தார்.
பின்னர் மிகவும் துக்கத்துடன் தான் முப்படை தலைமை தளபதி உயிரிழந்ததாக தெரிவித்து கொள்வதாக மக்களவையில் பேசினார்.
தளபதி ராவத் குடும்பத்திற்கு தனது இரங்கல்களை தெரிவித்து கொண்டு அவருக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி மரியாதை செய்யப்படும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன எனவும் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து மக்க ளவையில் சபாநாயகர் ஓம் பிர்லா தனது இரங்கலை தெரிவித்தார். மாநிலங்களவை இன்று கூடியதும் துணை தலைவர் ஹரிவஞ் துக்க தகவலை அவைக்கு தெரிவித்தார்.
பின்னர் அவையின் உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். அதே போலவே தற்போது மக்களவையிலும் மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது. பிபின் ராவத் உள்ளிட்டோரின் சடலங்கள் இன்று டெல்லிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
முழு ராணுவ மரியாதையுடன் நாளை இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்றும் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
ஹெலிகாப்டரின் கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு
குன்னூர் அருகே விபத்துக்குள்ளான விமானப்படை ஹெலிகாப் டரின் கருப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இந்திய முப்படைகளுக்கான தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் பயணித்த விமானப்படை ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானதில் பிபின் ராவத் உட்பட 13 பேர் மரணமடைந்தனர்.
இதனிடையே விபத்து எப்படி நேரிட்டது என்பது தொடர்பான விவரங்களை ஹெலிகாப்டரின் கருப்புபெட்டியில் தான் அறிய முடியும். ஆகவே அந்த கருப்புப்பெட்டியை தேடும் பணி நேற்று முதலே தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் குன்னூர் அருகே காட்டேரி நஞ்சப்பாசத்திரம் மலைப்பகுதியில் கருப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கருப்புபெட்டியை பெங்களூர் அல்லது டெல்லி கொண்டுசென்று ஆய்வுசெய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதில் கடைசி நேரத்தில் என்ன நடந்தது? என்ன உரையாடல் நிகழ்ந்தன? என்ன காரணத்திற்காக இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது? என்பது குறித்து சேகரிக்கப்பட உள்ளன.
கருப்பு பெட்டியில் இரு பகுதிகள் உள்ளன. ஒன்று பைலட்கள் பேசியதை பதிவு செய்யும். மற்றொன்று விமானம் எவ்வளவு உயரத்தில், எவ்வளவு வேகத்தில் பறந்தது போன்ற தரவுகளை சேமிக்கும் பகுதி.
இந்த இரண்டு பகுதியும் கடைசி 2 மணி நேரத்திற்கு பைலட்களுக்கும் தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையே நடக்கும் உரையாடல்களை பதிவு செய்து வைத்திருக்கும்.
தண்ணீரில் விழுந்தாலும் தீயில் எரிந்தாலும் இதில் உள்ள தரவுகள் பாதுகாப்பாக இருக்கும். இவை புவி ஈர்ப்பு விசையை விட 3400 மடங்கு விசையையும் 1,000 டிகிரி செல்சியஸை விட அதிக வெப்பநிலையையும் தாங்கக் கூடியது.
இதன் நிறம் ஆரஞ்சு. ஆனால் இதற்கு கருப்பு பெட்டி என்ற பெயரே நிலைபெற்றுவிட்டது.



