சேலம் மாவட்டம், வாழப்பாடியில் இன்று முழு உடல் பரிசோதனை செய்யும் வகையில், ‘வருமுன் காப்போம்‘ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 1240 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.
‘வருமுன் காப்போம்‘ திட்டத் தைத் தொடக்கிவைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சேலம் வந்தார். விமானம் மூலம் சேலம், காமலாபுரம் விமான நிலையத்துக்கு காலை 8.30 மணிக்கு வந்த முதல்வர், சேலம், தருமபுரி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
விமான நிலையத்தில் சேலம் மத்திய மாவட்ட திமுக செய லாளரும், எம்எல்ஏவுமான ஆர்.ராஜேந்திரன், சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ஆ.ராஜா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
காலை 10 மணிக்கு வாழப்பாடி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ‘வருமுன் காப்போம்‘ திட்ட மருத்துவ முகாமைத் தொடங்கிவைத்து பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் முன்னிலை வகித்தார்.
பின்னர், அங்கிருந்து ஆத்தூர் சென்ற முதல்வர், ரூ. 3 கோடியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தைத் திறந்துவைத்தார்.
பின்னர் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், மாலை 4.20 மணியளவில் சேலம், கருப்பூருக்குச் சென்று சிட்கோ மகளிர் தொழிற்பூங்காவை ஆய்வு செய்கிறார்.
தொடர்ந்து சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனப் பிரதிநிதிகள், விசைத்தறி உரிமையாளா்களுடன் கலந்துரையாடுகிறார்.
சேலம் பயணத்தை முடித்துக் கொண்டு, வியாழக்கிழமை தருமபுரி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
அனைத்து ஆய்வுப் பணிகளையும் முடித்து விட்டு, மாலை 5.30 மணிக்கு சேலத்தில் இருந்து விமானம் மூலமாக, சென்னை திரும்புகிறார்.



