ராமநாதபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் 225 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.
தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து குறளோவியம் என்ற தலைப்பில் மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடத்திய திருக்குறள் ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு ஊக்கப் பரிசு பெற்றமைக்காக அக்ஷதா பத்மாசினி, முனீஸ்வரன், ஜெயஸ்ரீ, ஷமீம் ஹீம்னா ஆகிய மாணவ-, மாணவி யருக்கு பாராட்டுச் சான்றிதழ்களுடன் ரூ.1000 வரை வோலையினையும், வருவாய் துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவைக்கான சான்றுகளையும், 2021-2022 ஆம் ஆண்டிற்கான தீண்டாமை கடைபிடிக்காத மத நல்லிணக்கத்துடன் வாழும் ஊராட்சியாக பரமக்குடி வட்டம், போகலூர் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு ரூ.10 இலட்சத்திற்கான வங்கி காசோலையினையும், முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை பரமக்குடி வட்டத்தைச் சேர்ந்த செய்யது அலி பாத்திமா என்பவருக்கு 33,643 ரூபாய்க்கான காசோலையினையும், திருவாடானை வட்டத்தைச் சேர்ந்த கார்த்திகா என்பவருக்கு 25,284 ரூபாய்க்கான காசோலையினையும், கமுதி வட்டத்தைச் சேர்ந்த கீர்த்தனா என்பவருக்கு 44,282 ரூபாய்க்கான காசோலையினையும், பரமக்குடி வட்டத்தைச் சேர்ந்த அபிதா என்பவருக்கு 26,503 ரூபாய்க்கான காசோலையினையும் என மொத்தம் ரூ.1,29,712ஐ மாவட்ட ஆட்சித் தலைவர் பயனாளிகளுக்கு வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கந்தசாமி உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.