கோவை மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் மரங்களில் உள்ள காய்ந்த மரக்கிளைகளை அகற்றி இயந்திரம் மூலம் துகள்களாக்கி அதே மரங்களுக்கு உரமாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவையில் சாலையோரம் உள்ள மரங்களில் காய்ந்த மரக்கிளைகள், விழும் நிலையில் உள்ள மரங்கள் போன்றவைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களிலும் மண்டலத்திற்கு ஒரு டிராக்டர் மற்றும் மரக்கிளைகளை துகள்களாக்கும் இயந்திரம் என அனைத்து மண்டலங்களிலும் டிராக்டர்கள் ரோந்து செல்கின்றன.
அப்போது காய்ந்த மரக்கிளைகள், இலைகள் போன்றவற்றை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி அந்த இயந்திரத் தில் போடுகின்றனர். உடனடியாக மரக்கி ளைகள், இலைகள் துகள்களாக மாறுகின்றன. இந்த துகள்கள் அனைத்தும் அதே மரத்திற்கு உரமாக போடப்படுகின்றன.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “தனியார் அமைப்புடன் இணைந்து இந்த டிராக்டர் மற்றும் இயந்திரங்கள் மாநகராட்சிக்கு பெறப்பட்டன.
வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது போன்று விழும் தருவாயில் உள்ள மரக்கிளைகள் அகற்றப்படும்.” என்றனர்.