Homeபிற செய்திகள்‘புதுமைப் பெண்’ திட்டத்தில் 300 பேருக்கு ரூ.36 லட்சம் ஒதுக்கீடு- முதற்கட்டமாக ஊக்கத் தொகை பெற்றவர்கள்...

‘புதுமைப் பெண்’ திட்டத்தில் 300 பேருக்கு ரூ.36 லட்சம் ஒதுக்கீடு- முதற்கட்டமாக ஊக்கத் தொகை பெற்றவர்கள் 163

நீலகிரி மாவட்டத்தில் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் 300 மாணவிகளுக்கு ரூ.36 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முதற்கட்டமாக 163 பேருக்கு மாதாந்திர ஊக்கத் தொகை, ‘புதுமைப் பெண்’ திட்டப் பை, வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு துறைகளின் மூலம், பல திட்டங்களை அறிவித்து மிக சிறப்பாக செயல்படுத்தி மக்கள் பாராட்டும் வகையில் செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக, பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம், கல்லூரி கனவு, எண்ணும் எழுத்தும் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நினைவாக, செப்.5-ம் தேதி ஆசிரியர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்நாளில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்க்கல்வி திட்டம் புதுமைப்பெண் திட்டத்தினை முதல்வர், சென்னையில் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டமான மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் முக்கிய நோக்கம் பெண்களுக்கு உயர்கல்வியை உறுதி செய்வதாகும்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் உயர்க்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12- ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000/- வழங்கக்கூடிய ஒரு மகத்தான திட்டம் இத்திட்டமாகும்.

தடையை உடைக்க பள்ளிகளில் படிக்க வரும் மகளிருக்கு கல்லூரிக்கு வருவதற்கு தடையும், தயக்கமும் இருக்கிறது. அந்த தடையை உடைப்பதற்காகவும், குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுவதற்காகவும், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைப்பதற்காகவும், பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவிக்கும் வகையிலும், உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் பங்கேற்க செய்யவும், பெண்களுக்கு சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் உருவாக்கப்பட்டதே இந்த ‘புதுமைப் பெண்’ திட்டம்.

எங்கெல்லாம் பெண்கள் கல்வி அறிவு மற்றும் நிதி குறித்த விழிப்புணர்வுப் பெற்றவர்களாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான குடும்பங்கள் அமையும்.

அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் 300 மாணவிகளுக்கு ரூ.36 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் 05.09.2022 அன்று முதற்கட்டமாக, உதகை, அரசு கலைக்கல்லூரி, கூடலூர், அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாணவிகள் என மொத்தம் 163 கல்லூரி மாணவிகளுக்கு வனத்துறை அமைச்சர் ‘புதுமைப் பெண்’ திட்டப் பைகளுடன் வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.

“பெருமையின் அடையாளம்”
அரசுப் பள்ளிகளில் பயில்வது வறுமையின் அடையாளம் அல்ல. பெருமையின் அடையாளம் என்பதனை உணர்த்தும் வகையில், அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வி கற்கும் கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1,000/- ஊக்கத்தொகை வழங்கிய, முதல்வருக்கு, நீலகிரி மாவட்ட கல்லூரி மாணவிகள் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

“பிறரையும் ஊக்கப்படுத்துவேன்”
இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த மாணவி ஆர்.வர்சினி கூறியதாவது:
தந்தை பெயர் ரவிசந்திரன். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தும்மனட்டி அரசு மேல்நிலைப்பளியில் படித்தேன். தற்போது உதகை அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன்.

நான் அரசு பள்ளியில் படித்த காரணத்தினால் எனக்கு ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் ரூ.1,000/- ஊக்கத்தொகை கிடைத்தது. இத்திட்டத்தின் மூலம் மாணவிகள் உயர்கல்வி கற்கும் எண்ணிக்கை அதிகமாகும்.

னது தோழிகளுக்கும் இத்திட்டத்தினை பற்றி எடுத்துக் கூறி உயர்கல்வி கற்க ஊக்கப்படுத்துவேன். பெண்கள் கல்வித்தரத்தினை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

“உதவியாக இருக்கும்”
இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த மாணவி என். சுகாஷிணி கூறியதாவது:
தந்தை பெயர் நடராஜன். சொந்த ஊர் சேலம் மாவட்டம். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சேலம் ஆட்டையாம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்தேன்.

அதன் பின்னர் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ படிப்பதற்கான இடம் கிடைத்து, முதலாம் ஆண்டு படித்து வருகிறேன்.

எனக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி திட்டம் ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் கீழ் ரூ.1,000/- ஊக்கத்தொகை கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாகவும், குடும்பத்திற்கும் உதவியாக உள்ளது.

முதல்வர் பெண் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இது போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வரும், முதல்வருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தொகுப்பு:
நி.சையத் முகம்மத்.
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
இரா.சரண்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
நீலகிரி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img