பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் பரபரப்பான ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளது. ஐந்து நீதிபதிகள் அமர்வில் 3 பேர் செல்லும் என்றும் தலைமை நீதிபதி உள்ளிட்ட 2 பேர் செல்லாது என்றும் தீர்ப்பை அளித்துள்ளனர்.
இந்த தீர்ப்பு மூலம் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு வழி வகுத்த 103 வது அரசியல் சாசன திருத்தச்சட்டம் செல்லும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.
இந்த தீர்ப்பை பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் வரவேற்றுள்ள போதிலும் எதிர்பார்த்தது போலவே தமிழகத்தில் இந்த தீர்ப்புக்கு பரவலான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
திமுக, பாமக, விசிக, இந்திய கம்யூனிஸ்டு, அமமுக, மநீம உள்ளிட்ட பல கட்சிகள் மற்றும் திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்து உள்ளன.
இது ஒடுக்கப்பட்ட பசியேப்பக்காரனை வெளியே தள்ளி, புளியேப்பக்காரனான முன்னேறிய ஜாதி ஏழைகளை உள்ளே விருந்துக்கு அனுப்பும் சமூக அநீதியாகும்
என கி.வீரமணி ரத்தினச்சுருக்கமாக… பொருத்தமாக கூறி விளக்கி இருக்கிறார். புள்ளி விவரம் எங்கே? ஆதாரம் எங்கே? என அவர் வினவி இருக்கிறார்.
தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக திமுகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அறிவித்து, சட்டப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. மேலும் இது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டியிருக்கிறார்.
முதல் நடவடிக்கையாக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்… அவசரம்… மிகமிக அவசரம்!