கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 8 மாதங்களாக இந்த குறை தீர்ப்பு கூட்டம் இணையதளம் வாயிலாக நடைபெற்று வந்தது.
கொரோனா தொற்று குறைந்த சூழலில் நேற்று நேரடியாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனி சாமி பேசியதாவது:
விவசாயிகள் பயன் படுத்தும் விதைகள், உணவு தானியங்கள் குறித்து இன்றைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, -மாணவிகளுக்கு விதைகள், பண்ணை விவசாயம் குறித்து பாடங்கள் நடத்த ப்பட வேண்டும்.
அண்டை மாநிலமான தெலுங்கானாவில் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட் டுள்ளது. ஆற்று நீரை விவசாயத்துக்கும், குடிநீருக்காகவும் பயன்படுத்தும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மாசுபடாத நீர் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை தடை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்தான்
நீர்நிலைகள் மாசுபடாமல் இருந்து விவசாயம் செழிக்கும்.
மழை நீரை சேமிக்க, நிலத்தடி நீரை அதிகரிக்க பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளுக்கு மழை நீர் சென்றடைய வழி வகை செய்ய வேண்டும் .இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் விவசாயிகள் கூறுகையில், “பயிர் காப்பீடு, ஆயுள் காப்பீடு, மானியம் போன்றவைகள் விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்“ என்றனர்.



