தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் உதய் திட்டத்தின் கீழ் புதிய 22 கி.வோ. மில்லர்புரம் மின்னூட்டி அமைப்பதற்கு பூமி பூஜை விழா நடைபெற்றது.
பணியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார். மேயர் ஜெகன் பெரியசாமி, தலைமை பொறியாளர் செல்வக்குமார், மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள், செயற்பொறியாளர்கள் ரெமோனா, வெங்கடேஸ்வரன், ராம்குமார், முத்துராஜ் ஆகியோர் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
தற்போது பயன்பாட்டில் உள்ள 22கி.வோ. பண்டாரம்பட்டி மின்னூட்டியில் இருந்து மின்னூட்டம் வழங்கப்படும் சுமார் 23கி.மீ. தூரம் உள்ள உயரழுத்த மின் தொடர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு புதியதாக அமைக்கப்படும் 22 கி.வோ. மில்லர்புரம் மின்னூட்டி வழியாக சுமார் 11.கி.மீ. தூரமாக குறைக்கப்படுகிறது. இதன் காரணமாக மின் தடை நேரம் குறைக்கப்படுவதுடன், குறைந்த மின் அழுத்தம் பிரச்சனைகளும் சரி செய்யப்படும்.
இந்த மின்னூட்டி மூலம் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மில்லர்புரம், பால்பாண்டி நகர், நிகிலேசன் நகர், புஷ்பா நகர், கதிர்வேல் நகர், ராஜீவ் நகர், சின்னமணி நகர், ராஜகோபால் நகர், குறிஞ்சி நகர், தேவர் காலனி, சின்னகண்ணுபுரம், பாரதி நகர், மீளவிட்டான் ஆகிய பகுதிகளில் உள்ள 12756 மின் நுகர்வோர்கள் பயனடைவார்கள்.
இந்நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள் உமையொருபாகம், சுடலைமுத்து, சித்திவிநாயகமூர்த்தி, ஆறுமுகம், வேலாயுதம், பிரேம், ஜெயக்குமார், ரெமிங்டன், உதவி பொறியாளர்கள் கவிதா செல்வி, இரமேஷ், பெருமாள், சோமலிங்கம், சகாயமங்களராணி, சுப்புலெட்சுமி, செல்வலெட்சுமி, சந்திரஒளி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.