வடகிழக்கு பருவமழை பெய்து வருவதையொட்டி பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீபாரதி நகரில் தீயணைப்புத் துறையினர் இடர்காலங்களில் பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு என செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.
தமிழக அரசு வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பொதுமக்களை இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகங்களை அறிவுறுத்தியுள்ளது.
அதனடிப்படையில் தீயணைப்பு மீட்டுப் பணிகள் துறையானது பொதுமக்களிடம் இதுதொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் கடந்த சிலநாட்களாக தினமும் கனமழை பெய்து வருகிறது. இதன்பேரில் பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு நிலையத்தினர் பாதிக்கப்படும் இடமாகக் கருதப்படும் கூடலூர் பேரூராட்சிக்குள்பட்ட 13வது வார்டு மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீபாரதிநகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொண்டனர்.
நிலைய அலுவலர் ரகுநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வெள்ளக்காலத்திற்கு முன்பும், வெள்ள அபாய எச்சரிக்கை பெறப்படும்போதும், வெள்ளத்தின்போதும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் விதம் குறித்தும் கொட்டும் மழையிலும் செயல்விளக்கமளித்தனர்.
வெள்ளநீரிலோ அல்லது அருகிலோ சிறுவர்களை விளையாட அனுமதிக்கக் கூடாது, மழைக்காலங்களில் பாதுகாப்பாக மின்சாதனங்களைப் பயன்படுத்தவேண்டும், உயர்அழுத்த மின்வயர்களுக்கு கீழோ அல்லது கோபுரங்களுக்கு கீழோ நிற்கக்கூடாது, மின் வயர் அறுந்து கிடந்தால் உடன டியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும், வெள்ளநீரில் கழிவு நீர் மற்றும் ரசாயனக் கழிவுகள் கலந்து வர வாய்ப்புள்ளதால் அதனை யாரும் தொடக்கூடாது, அபாய காலங்களில் தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
இந்நிகழ்ச்சியின்போது பொதுமக்களும் செயல் விளக்கத்தில் பங்கேற்றனர்.



