fbpx
Homeபிற செய்திகள்திட்டமிட்டபடி பள்ளி, கல்லூரிகள் நாளை மறுநாள் திறப்பு கல்வி நிறுவன விடுதிகள் செயல்பட அனுமதி- முதல்வர்...

திட்டமிட்டபடி பள்ளி, கல்லூரிகள் நாளை மறுநாள் திறப்பு கல்வி நிறுவன விடுதிகள் செயல்பட அனுமதி- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திட்டமிட்டபடி வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9,10,11,12-ம் வகுப்புகள், கல்லூரிகள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான அனைத்து அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு விடுதிகள், தனியார் கல்வி நிறுவனங்களின் விடுதிகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் தொற்றுநோய் பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக இன்று (ஆக.30) தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் கூறியதாவது:

ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் கடந்த 28-ம் தேதி வெளியிட்டுள்ள ஆணையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வரும் செப்.31-ம் தேதி வரை தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தி உள்ளது. இதன் அடிப்படையில், நடைமுறையில் உள்ள கொரோனா நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் செப்.15-ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன.

பொதுமக்கள் நலன் கருதி, நோய்த் தொற்று பரவலை குறைக்க பின்வரும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்.5 முதல்) அனைத்து கடற்கரையிலும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. தொடரும் தடைகள் ஏற்கனவே அறிவித்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் விதிக்கப்பட்ட தடையும், திருவிழாக்கள் நடத்துவதற்கான தடையும் தொடரும்.

கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அந்தந்த மாவட்டங்களில் நிலவும் நோய் பரவலின் அடிப்படையில் தகுந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் ஆலோசனையின் பேரில், செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11, 12-ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான அனைத்து அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு விடுதிகள், தனியார் கல்வி நிறுவனங்களின் விடுதிகள் ஆகியவை இயங்க அனுமதிக்கப்படுகின்றன. அதேபோல, பணிபுரிபவர்களுக்கான தனியார் தங்கும் விடுதிகள், கொரோனா நோய்த் தொற்று தடுப்பிற்கான நிலையான வழிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. விடுதிகளில் பணியாற்றும் விடுதி காப்பாளர்கள், சமையலர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் தடுப்பூசி செலுத்தி இருப்பதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கேரள மாணவர்கள் தற்போது கேரள மாநிலத்தில் நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று பரவல் நிலையினைக் கருத்தில் கொண்டு, அந்த மாநிலத்தில் இருந்து கல்லூரி கல்வி பயில வரும் மாணவ, மாணவர்கள் தடுப்பூசி செலுத்தி இருப்பதுடன், ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றும் பெற்றிருப்பதை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் பணியாளர்களும், தடுப்பூசி செலுத்தி இருப்பதை தொடர்புடைய நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், தொழில் வர்த்தக நிறுவனத்தினர், சிறு வியாபாரிகள், வங்கி மற்றும் அரசு பணியாளர்களுக்கு சமூக பொருளாதார நடைமுறைகள் தடையின்றி நடைபெற முன்னுரிமை அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி பொறுப்பாளர்கள், முருத்துவத் துறையினர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். கடைகளின் நுழைவு வாயிலில், கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, தானியங்கி உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடைகளில் பணிபுரிபவர்களுக்கும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக் கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அதிக நபர்களை அனுமதிக்கக் கூடாது அனைத்து கடைகளும் உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது. கடைகளின் நுழைவு வாயிலில், பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

இந்த விதிமுறைகளைப் பின்பற்றாத வணிக, இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நோய்த் தொற்று கட்டுப்படுத்த… நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாடு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை, வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் இப்பகுதியில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தவும் மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நோய் கட்டுப்பாடு நடவடிக்கை நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும்.

இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை. கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த் தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகில் உள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை சிகிச்சை பெறவும் வேண்டும்.

பெற்றோரும் உணர வேண்டும் மாணவர்களின் கல்வி மற்றும் உளவியல் நலனுக்காக பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன என்பதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் உணர்ந்து, அனைவரும் முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும், இதர பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதையும் உறுதி செய்ய வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்திட வேண்டும்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img