கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 சோதனைச் சாவடிகளில் சோதனை நடத்தியதில், ரூ.46 ஆயிரம் சிக்கியது. நீலகிரி மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்திலும் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதிலும் உள்ள சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி கோபாலபுரம் சோதனைச் சாவடியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அலுவலகத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆவணங்களை சரிபார்த்தபோது அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.21,600 இருந்தது தெரிந்து, அதைப் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரி களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கேஜி சோதனைச் சாவடியிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் ரூ.25,000 பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்டத்தில் இரண்டு இடங்களில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் ரூ.46,200 பறிமுதல் செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி தாலுகா அலுவலகம் அருகே சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவுக்கு லஞ்சம் கேட்பதாக புகார் கொடுக்கப்பட்டிருந்தது.
அதன்பேரில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கு கணக்கில் வராத ரூ.78 ஆயிரத்து 490 பறிமுதல் செய்யப்பட்டது.
சில ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது. இதுதொடர்பாக துணைப்பதிவாளர் செந்தில் குமார் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது



