கோவையின் அடையாளம் சிறுவாணி என்றாலும் சமூகத்தை அடுத்த கட்டத்தின் வளர்ச்சிக்கு நகர்த்தி எழுத்துப்பணியாற்றிய கவிஞர் புவியரசு கோவையின் அடையாளமா கவும், பெருமையாகவும் திகழ்கிறார் என தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஆய்வரங்க நிகழ்வில் தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சாகித்திய அகாடமி விருதாளர் கவிஞர் புவியரசுவின் படைப்புகள் குறித்த ஆய்வரங்கம் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.
முன்னதாக கவிஞர் புவியரசுவின் படைப்புகள் குறித்து தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கவிஞர் தங்க.முருகேசன் தொகுத்த அறிமுக நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. தமுஎகச மாவட்ட தலைவர் தி.மணி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அழகன் கருப்பண்ணன் வரவேற்புரையாற்றினார்.
நன்நெறிக் கழகத்தின் தலைவர் இயகோகா சுப்பிரமணியம் நூலை வெளியிட தமுஎகச மாவட்ட செயற்குழு உறுப் பினர் மு.பரமேஸ்வரன், லஷ்சுமி கார்பன் அ.விஸ்வநாதன் மற்றும் சு.ஜெயபிரகாஷ், நா.மகேந்திரன், நா.கிருஷ்ணசாமி, குறிஞ்சி பண்பாட்டு இயக்கத்தின் முனைவர் சுப.செல்வி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் ம.கிருஷ்ணன், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர்.
ஆய்வரங்கத்தில் கவிஞர் புவியரசு வின் கவிதை குறித்து தமுஎகசவின் மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் நா.முத்துநிலவன், நாவல்கள் குறித்து எழுத்தாளர் அ.கரீம், மொழி பெயர்ப்பு குறித்து எழுத்தாளர் ம.மணிமாறன், நாடகம் குறித்து முனைவர் எல்.ராம்ராஜ் ஆகியோர் ஆய்வுகளை முன்வைத்தனர்.
இதில் விஜயா பதிப்பகம் மு.வேலாயுதம், கலை இலக்கிய பெருமன்றத்தின் கே.சுப்பிரமணி, புலவர் இரணியன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த் துரையாற்றினர். நிறைவாக தமுஎகச மதிப்புறு தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் ஆய்வரங்க ஆய்வுகளை தொகுத்து சிறப் புரையாற்றினார்.
நிகழ்வில் கரிசல் குயில் கிருஷ்ணசாமியின் பாட்டாளி வர்க்க தமிழிசை பாடல்கள் அரங்கில் இருந்தவர்களை மெய்மறந்து கேட்க செய்தது.
முன்னதாக நிகழ்வில் பங்கேற்ற எழுத்தாளர்கள் பேசுகையில், வானம் பாடி இயக்கத்தின் அச்சாணியாக கவிஞர் புவியரசு திகழ்ந்தார். வயது 91 என்றாலும் சமூகத்தின்பால் அவருக்கு உள்ள அக்கறை இன்னமும் எழுத,பேச வைத்துக்கொண்டே இருக்கிறது.
கதை, கவிதை, நாவல், மர்மநாவல், மொழிபெயர்ப்பு, நாட கம், தொலைக்காட்சி நாடகம், திரைக்கதை, கட்டுரை, திறனாய்வு கட்டுரைகள் என அனைத்திலும் தனது முத்திரையை பதித்துள்ளார்.
இதுவரை 130க்கும் மேற்பட்ட நூல்களை தமிழ் சமூகத்திற்கு தனது எழுத் தின் வழியாக வாசக பரப்பிற்கு கொண்டு சென்றுள்ளார். இதுபோக ஏராளமான மதிப்புரைகள், முன் னுரைகள் என தொடர்ந்து இயங்கி கொண்டே இருக்கும் கவிஞர் புவியரசு தமிழ்ச்சமூகத்தின் பெருமை மிகு அடையாளம் என்றனர்.
நிறைவாக கவிஞர் புவியரசு ஏற்புரையாற்றினார். தமுஎகச மாவட்ட செயலாளர் மு.ஆனந்தன், பொருளாளர் ம.ஜென்னிஸ், மாநி லக்குழு உறுப்பினர்கள் தங்க.முருகேசன், மீ.உமாமகேஸ்வரி நிர்வாகிகள் இரா.வெங்கடேசன், முனைவர் வெ.மைதிலி, புலவர் இரா.பானுமதி உள்ளிட்டோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். முடிவில் ந.அருள் மணி நன்றி கூறினார்.



