தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத் (சீமா) தலைவர் கே.வி.கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
கோவை பம்புசெட்டு நிறுவனங்கள், இந்தியாவின் சுமார் 55% பம்புசெட்டுகளின் தேவையை பூர்த்தி செய்கின்றனர். கோவை பம்புசெட்டு உற்பத்தியாளர்களின் சங்கம் சீமா மற்றும் நிழல் மையம் இணைந்து கடந்த 13ம் தேதி முதல் ஆதரவற்றவர்கள், வயது முதிர்ந்தோர், தொழிலாளர்கள் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள், பசியால் வாடும் அனைவருக்கும் காலை மற்றும் மதிய உணவு வழங்கி வருகின்றோம்.
கோவையில், ரயில் நிலையம், அரசு பொது மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, சிங்காநல்லூர் பேருந்து நிலையம், உக்கடம், டவுன்ஹால், புலியகுளம் பகுதிகளில் உள்ள பசியால் வாடும் அனைவருக்கும் காலை மற்றும் மதிய உணவு வழங்கி வருகின்றோம்.
சுமார் 500 பேருக்கு (ஒரு நாள்) உணவு வழங்கலாம் என ஆரம்பித்து இன்று தினமும் 4000 பேர் பசியாறுகின்றனர். கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள பல்வேறு அறக்கட்ட ளைகள், காப்பகங்களில் உள்ளவர்களுக்கும் உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த நற்பணி சிறக்க கொரோனா பொருந்தொற்று காலங்களில் பாடுபடும் நிழல் மையத்தின் நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மற்றும் பொருளுதவி செய்துவரும் சீமாவின் அங்கத்தினர்கள் அனைவருக்கும் சீமாவின் சார்பில் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



