கோவை காருண்யா பல்கலைக்கழகம் சார்பில் ரேஸ்கோர்ஸ்சில் உள்ள ஐ.டி.சி. ஓட்டலில் தண்ணீர் இந்தியா என்ற தலைப்பில் நீர் மேலாண்மை மற்றும் பயன்பாடு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் ரூர்கே தேசிய நீரியல் கல்லூரி முன்னாள் இயக்குனர் சிங், டெல்லி தேசிய தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர் சந்தோஷ் தம்பி, ஐதராபாத் நீர்வளங்கள் மேலாண்மை மதிப்பீடு குழு இயக்குனர் ராஜு, பரிதாபாத் மத்திய நிலத்தடி நீர் உறுப்பினர் சுப்புராஜ் உள்பட பலர் கலந்துகொண்டு நீர் மேலாண்மை மற்றும் பருவநிலை மாறுபாடு காரணமாக தண்ணீர் பிரச்சினை குறித்து பேசினார்கள். இந்த கருத் தரங்கில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து காருண்யா பல்கலைக்கழக இணை துணைவேந்தர் ஜேம்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது:- பருவ கால நிலைமாற்றத்தால் மழை பெய்யும் நிலைமாறுபட்டு வருகிறது. இதனால் தண்ணீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் தமிழ்நாடு, கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. காவிரி உற்பத்தியாகும் பகுதியில் மழை அளவு குறையும் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதனால் காவிரி படுகையில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு நெல் உற்பத்தி பாதிக்கும். இந்த கருத்தரங்கில் இது சம்பந்தமான 20 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டு மத்திய மாநில அரசுகளுக்கு அனுப்பிவைக்கப்படும். மேற்கண்டவாறு அவர் கூறினார்.



