கோவையில் துரத்திப் பிடிக்க முயன்ற காவல் ஆய்வாளரை கஞ்சா வியாபாரி தள்ளிவிட்டதால் கை மற்றும் கால் எலும்புகளில் முறிவு ஏற்பட்டது. காவல் ஆய்வாளர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை ரத்தினபுரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜேஷ் கண்ணா. சிவானந்தா காலனியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக வந்த தகவலையடுத்து ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா மற்றும் உதவி ஆய்வாளர் தலைமை காவலர் சுகந்த ராஜன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அண்ணாநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இளைஞர் ஒருவர் நின்று கொண்டு இருப்பதை பார்த்து விசாரிக்க அருகில் சென்றுள்ளனர். போலீசார் வருவதை பார்த்து அந்த இளைஞர் தப்பியோட, காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா அந்த இளைஞரை துரத்தி பிடிக்க முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த இளைஞர் காவல் ஆய்வாளரை தள்ளிவிட ஆய்வாளர் கீழே விழுந்ததில் கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனிடையே உடனிருந்த தலைமைக் காவலர் சுகந்த ராஜன் அந்த இளைஞரை துரத்திப் பிடித்து விசாரணை நடத்தியதில், அந்த இளைஞர் சிவானந்தா காலனி பகுதியை சேர்ந்த சூரியபிரகாஷ் என்பதும் முன்னதாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது.
இதனிடையே, படுகாயமடைந்த காவல் ஆய்வாளரை மீட்ட காவ லர்கள் சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து ள்ள ரத்தினபுரி காவல் துறையினர் சூரிய பிரகாஷ் மீது அரசு ஊழியரை அவரது பணியை செய்யவிடாமல் தடுத்து தாக்குதல் நடத்துதல் (353) என்ற பிரிவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



