fbpx
Homeபிற செய்திகள்இளைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி!

இளைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இளைஞர்கள் வேலையின்றி திண்டாடும் அவலம் தலைவிரித்தாடுகிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இத்தனை கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவோம், இத்தனை லட்சம் பேருக்கு வேலை அளிப்போம் என்று மத்திய, மாநில அரசுகள் வாக்குறுதிகள் அளிப்பது வாடிக்கை.

இப்படியெல்லாம் அரசுகள் கூறுவது, தொழில்கள் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகளைப் பற்றியதாகத் தான் இருக்கும். ஆட்சிக்கு வந்தபிறகு அது எந்த அளவிற்கு பலன் தந்தது என்றால் அது ஓர் பெரிய கேள்விக்குறியாகத் தான் இருக்கும்.

ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் படித்து வேலையில்லாமல் இருப்போர் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேதான் போகிறது; குறைந்தபாடில்லை. இன்னமும் அரசு வேலை கிடைப்பதென்றால் அது குதிரைக் கொம்பு என்ற நிலை தான் தொடருகிறது.

இந்த சூழலில் பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பகவந்த் சிங் மன் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு இளைஞர்களுக்கு 25,000 அரசு வேலைகளை வழங்க முடிவு செய்திருக்கிறது.

இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரட்சி அறிவிப்பாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால், அரசுத்துறைகளில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், 2 லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்திருந்தது.

ஒன்றன் பின் ஒன்றாக வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனையும் நிறைவேற்றித் தருவார் என்பதில் ஐயமில்லை.

நேற்றுகூட, சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், அனைவருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே அரசினுடைய நோக்கம் என்றும் ‘வேலை இல்லை, வேலை கிடைக்கவில்லை, வேலைவாய்ப்பைப் பெற முடியாத நிலையில் இருக்கிறேன்’ என்ற அந்த சொல்லை இந்த 5 ஆண்டு காலத்திற்குள் நிச்சயமாக நாங்கள் போக்குவோம் என்ற உறுதியை அளிக்கிறேன் என்றும் மு.க.ஸ்டாலின் அறுதியிட்டுச் சொல்லியிருக்கிறார்.

பஞ்சாப் மாநிலத்துடன் ஒப்பிடும் போது, தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கான தேவை மிகவும் அதிகமாகவே உள்ளது. வேலை வழங்குவதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் பஞ்சாபை விட தமிழக அரசிடம் அதிகமாக உள்ளன. அதை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது.

இருந்தபோதிலும் கடந்த அதிமுக அரசு, கஜானாவை சுத்தமாகக் காலி செய்ததோடு சுமார் 5 லட்சம் கோடி கடனையும் விட்டுவிட்டுத் தான் ஆட்சிக் கட்டிலில் இருந்து இறங்கியது.

இதனால் ஏற்பட்ட நிதி நெருக்கடிகளை திமுக அரசு கொஞ்சம் கொஞ்சமாக சீர்செய்து வருகிறது. விரைவிலேயே நிதி நிலைமை சீராகி விடும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருக்கிறார்.

தமிழ்நாட்டின் பொருளாதாரச் சூழலில் ஒரு லட்சம் பேருக்காவது அரசு வேலைகளை வழங்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.

அதற்குரிய நேரத்திற்காக… தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் காத்திருக்கிறார். இதைத் தான் அவரது நேற்றைய பேச்சு உறுதிப்படுத்துகிறது.

நம்பிக்கையுடன் காத்திருப்போம்!

படிக்க வேண்டும்

spot_img