பெண்ணடிமைத்தனத்தைத் தூண்டு கிற மனு நூல், சனாதன தர்மத்தின் ஒடுக்குமுறை வாழ்வியலை எதிர்த்து, அதனை ஒழிக்க வேண்டியதன் தேவையை கடந்த செப்டம்பர் 2-ம் நாள் சனாதன ஒழிப்பு மாநாட்டில் வலியுறுத்திப் பேசினார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அப்பேச்சை எதிர்த்து வழக்குகள் பல பாய்ந்தன. எனினும், முன்வைத்த கருத்தியலிலிருந்து பின்வாங்க மாட்டேன் என்றும் சமூகநீதியை நிலைநிறுத்துவதே தம் கொள்கை எனவும் சனாதன ஒழிப்பை தொடர்ச்சியாக முழங்கி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
கருத்தியல் என்பது எங்களுக்கு, அதிகாரத்தைவிட முக்கியமானது,
என திராவிடக் கருத்தியலில் தான் கொண்டிருக்கும் உறுதியை வெளிப்படுத்தினார் உதயநிதி ஸ்டாலின்.
ராமர் கோவில் திறப்பு விழா குறித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ”முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னது போல, நாங்கள் எவ்வித மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல.
எந்த கோவிலுக்கும் எதிரானவர்களும் அல்ல. ஆனால் மசூதியை இடித்து, அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டிருப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை,” என தெரிவித்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அண்மையில் வெற்றிகரமாக நடந்து முடிந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை அடுத்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் முதலீடுகளைப் பெற வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
அச்சமயத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்படுவார் என்ற ஒரு வதந்தி பரப்பப்பட்டது. ’துணை முதல்வர்’ வதந்தியைக் குறித்து செய்தியாளர்கள் கேட்க, “ஆம், அமைச்சர்கள் அனைவரும் முதல்வருக்கு துணையாக தான் உள்ளோம்,” என்ற அமைச்சர் உதயநிதியின் மதிநுட்பம் நிறைந்த பதில், வதந்திகளை தவிடுபொடியாக்கியது. அமைச்சரின் பதிலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் பாராட்டினார்.
எந்தக் கேள்வியாக இருந்தாலும், அதற்கு நேரம் எடுத்துக் கொண்டு விடையளிக்காமல், மனதில் தோன்றுவதை ஒற்றை சொற்றொடரில் வெளிப்படையாக தெரிவிக்கும் இயல்பு, அமைச்சர் உதயநிதியின் தனித்துவமாக தமிழ்நாட்டு அரசியல் வெளியில் கருதப்படுகிறது.
இப்படிப்பட்ட எவரையும், எந்தக் கருத்தையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் அமைச்சரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தான், நாளைய தினம் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டை தலைமை தாங்கி நடத்துகிறார்.
திமுக முன்னணி தலைவர்களும் கூட்டணி கட்சித் தலைவர்களும் சிறப்புரை ஆற்றுகிறார்கள். திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மாநாட்டு நிறைவுப் பேருரை ஆற்றுகிறார்.
திமுகவிற்கு வாளும் கேடயமுமாக இந்த மாநாடு அமையும் என்பதில் ஐயமில்லை. தி.மு.க. ஆட்சியின் காவல் படையாக மற்றும் எதிரிகளை எந்த நிலையிலும் எதிர்கொள்ளும் இளைஞர்களின் இப்படை, அதன் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தோள்தட்டிப் புறப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கான தொடக்கமாக இந்த மாநாடு அமையப்போகிறது. உலகச் சாதனை மாநாடாக கூட அமையப்போகிறது.
‘‘இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும்?” என்ற முழக்கத்தோடு, வெற்றி வாகை சூட, களம் காணும் இளஞ்சிங்கங்களுக்கு வாழ்த்துகள்!