கடலூரில் நடந்த உலக சிறுநீரக தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அருண்தம்பு ராஜ் தொடங்கி வைத்தார்.
உலக சிறுநீரக தினத்தை யொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி கடலூர் டவுன்ஹால் அருகில் நடந்தது. பேரணியை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அனைவருக்கும் சமமான சிறுநீரக நலம் மற்றும் தகுந்த மருத்துவம் கிடைப்பதை உறுதிசெய்வோம் என்ற கருப் பொருளுடன் கூடிய பேரணியில் கடலூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
பேரணியில் சிறுநீரக பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் செவிலியர்கள் சென்றனர். பேரணி நேதாஜி சாலை, நெல்லிக்குப்பம் சாலை வழி யாக சென்று அரசு ஆஸ்பத் திரியை சென்றடைந்தது.
பேரணியின் போது, மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் பேசியதாவது: 2019-ம் ஆண்டுகணக்கெடுப்பின்படி உலக அளவில் 850 மில்லியன் மக்களை சீறுநீரக நோய் பாதித்துள்ளது. சுமார் மில்லியன் மக்களின் இறப்புக்கும் காரணமாக இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயின் ஆரம்ப நிலையில், உணவு கட்டுப்பாடு மற்றும் மருந்துகள் போதுமானது.
நோய் முற்றிய நிலையில் ரத்த சுத்திகரிப்பு, டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இவற்றில் டயாலிசிஸ் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேரணியில் அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் அசோக்பாஸ்கர், தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர்காரல், மாவட்ட சிறுநீரகவியல் டாக்டர் திருமுருகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.