fbpx
Homeதலையங்கம்தமிழ்நாடு முழுவதும் பரவட்டும் பெருந்தொழில்கள்!

தமிழ்நாடு முழுவதும் பரவட்டும் பெருந்தொழில்கள்!

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை ஈர்க்க சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. இன்றும் தொடர்ந்து நடைபெறும் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் என மொத்தம் 35 நாடுகளில் இருந்தும் டாப் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன.
இந்த மாநாட்டின் மூலம் ரூ.5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பதே இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கிய முதல் நாளே நிர்ணயிக்கப்பட்ட 5.5 லட்சம் கோடி இலக்கு எட்டப்பட்டுள்ளதும் முன்னணி நிறுவனங்களோடு 100க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதும் தமிழ்நாடு அரசின் பெரும் சாதனையாகும்.

கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. பின்னர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3.43 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.

நேற்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளே அதன் இலக்கான 5.5 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து உள்ளது. நிறைவு நாளான இன்று இத்தொகை இன்னும் உயரும்.

இது முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொழில் முன்னேற்ற முன்னெடுப்புக்குக் கிடைத்து மாபெரும் வெற்றி என்றால் மிகை அல்ல. இந்த மாநாட்டில் ஒன்றிய ஜவுளி, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமை விருந்தினராகப் பங்கேற்று தமிழகத்தின் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறேன்.

அவரையும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவையும் கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். தமிழ்நாட்டை மாற்றியமைப்பதில் தைரியமான முடிவுகளை எடுக்கின்றனர் என்று பாராட்டி இருப்பது இன்னும் சிறப்பு.

பேரிடர்களால் அதிகளவு செலவு, ஒன்றிய அரசின் நிதி குறைப்பு போன்ற நெருக்கடிகள் இருந்தபோதும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னேறி வருவதை யாராலும் மறுக்க முடியாது. அதன் மூலம் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது, கிடைத்து வருகிறது என்பது மிகமிக முக்கியமானது.

தமிழ்நாட்டில் வெளிநாட்டு நிறுவனங்கள் கடைவிரிக்கும் முக்கிய நகரங்களாக சென்னை, கோவை, ஓசூர் இருக்கின்றன. மாநராடடில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் சீரான தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே அரசின் நோக்கம் என முழங்கியிருக்கிறார்.

ஒன்றிய அமைச்சரோடு நாமும் சேர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டுவோம் & தமிழ்நாடு முழுவதும் பரவட்டும் பெருந்தொழில்கள்!

படிக்க வேண்டும்

spot_img