கரூர் மாவட்டம், வெள்ளியணை சொட்டைக் குளத்தில் வனத்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம், காலநிலை மாற்ற இயக்கம், சார்பாக செய்தியாளர் பயணத்தில் பனை விதை நடும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கி வைத்து தகவல் தெரிவித்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் பனை விதை நடும் பணியை ஒரு முக்கியமான இயக்கமாக, தொடங்கி வைத்துள்ளார்கள்.
இதன் மூலம் தமிழ்நாட்டின் மாநில மரமான பனையைப் பாதுகாப்பது, அதன் எண்ணிக்கையை அதிகரிப்பது, நிலத்தடி நீரை மேம்படுத்துவது, கடற்கரை மற்றும் நீர்நிலைப் பகுதிகளைப் பாதுகாப்பது மற்றும் பசுமைப் பரப்பை அதிகரிக்க முடியும்.
அந்த வகையில் இன்றைய தினம் கரூர் மாவட்டத்தில், “ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி” என்ற பெயரில் கிரீன் நீடா போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் தமிழக அரசின் துறைகளுடன் இணைந்து இந்தப் பணியை மேற்கொள்ள உள்ளனர்.
காவிரிக் கரையில் பனை விதை நடும் பணியில் ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை காவிரிக் கரையின் இருபுறமும், சுமார் 416 கி.மீ. தொலைவுக்கு பனை விதைகள் நடும் பிரம்மா ண்டமான பணி மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணியானது தொடர்புடைய மாவட்ட நிர்வாகங்கள், வனத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, தன்னார்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் ஒத்துழைப்புடன் இப்பணி மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது. இந்த இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள நீர்நிலைகள், ஏரிக்கரைகள், குளக்கரைகள், தரிசு நிலங்கள் மற்றும் காவிரிக் கரை போன்ற இடங்களில் பனை விதைகள் நடப்படுகின்றன.
நடப்பட்ட பனை விதைகளின் எண்ணிக்கையை கண்காணிக்கவும், புவி-குறியிடவும்(Geo-tagging) ‘உதவி’ (Udhavi) என்ற செயலி மற்றும் இணையதளம் (udhavi.app/panai) பயன்படுத்தப் படுகிறது. இது பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கண்காணிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், நடப்பு 2025 ஆம் ஆண்டுக்கான பனை விதை நடும் திட்டத்தின் இலக்கு 6 கோடி பனை விதைகளை தமிழகம் முழுவதும் நடுவது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநில அளவில் 6 கோடி பனை விதைகள் நடும் திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்திற்கு 4.50 இலட்சம் பனை விதைகள் நட இலக்கு நிர்ணயிக்கப் பட்டு இன்றைய தினம் சொட்டைக் குளக் கரை யோரத்தில் 350 பனை விதைகள் நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் சண்முகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வீ.ரெ.வீரபத்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சரவணன், தன்னார்வலர்கள், மாணவ, மாணவியர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



