மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை, ஆலங்கொம்பு, பகத்தூர், திம்மராயம்பாளையம், சென்னம்பாளையம், வெள்ளி குப்பம்பாளையம், வச்சினம்பாளையம், மூக்கனூர், மூலத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 5,000 க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் என சுமார் 20,000 மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது.
குறிப்பாக கோவையில் 100 ல் இருந்து 109 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் வீட்டில் இருக்கும் போதும்,வெளியே செல்லும் போதும் பெண்கள் அதிக அளவில் கைத்தறியில் நெசவு செய்யப்படும் காட்டன் புடவைகளை விரும்புகின்றனர்.
இதனால் சிறுமுகை பகுதிகளில் உள்ள புடவை கடைகளில் பெண்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் கைத்தறி காட்டன் புடவைகளின் விற்பனையும் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிறுமுகை பகுதியைச்சேர்ந்த காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் தண்டபாணி கூறுகையில், `சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சாப்ட் சில்க், சில்க் காட்டன்,பட்டு,பியூர் காட்டன்,செமி சில்க் என பல்வேறு ரகங்கள் கைத்தறியில் நெசவு செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாக வழக்கமாக 50 காட்டன் புடவைகள் வரை விற்பனையாகி வந்த நிலையில் அது இரு மடங்காக உயர்ந்துள்ளது.இதனால் காட்டன் புடவைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாது கேரளா,கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெண்கள் அதிக அளவில் சிறுமுகை வந்திருந்து புடவைகளை வாங்கிச்செல்கின்றனர்` என்றார்.
இதுகுறித்து நெசவாளர் ஒருவர் கூறுகையில் கைத்தறி நெசவுத்தொழில் மிகவும் பாரம்பரியமிக்க தொழிலாக இருந்து வருகிறது.வழக்கமாகவே கைத்தறியில் நெசவு செய்யப்படும் ஆடைகளுக்கு எப்போதுமே மவுசு அதிகமாக இருந்து வரும் நிலையில் தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால் காட்டன் புடவைகளுக்கு மவுசு சற்று அதிகமாகவே உள்ளது. மேலும்,புடவைகளின் உற்பத்தியும் அதிகமாகவே இருப்பதால் தங்களுக்கும் உரிய வருவாய் கிடைக்கிறது என்றார்.