கோவை அருகே பயிர்களை துவம்சம் செய்து அட்டகாசம் செய்து வந்த ரோலக்ஸ்
யானை பிடிபட்டது. சில நாட்களுக்கு முன் மயக்க ஊசி போட முயன்ற கால்நடை மருத்துவரை தாக்கியது இந்த யானை தான்.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டி அமைந்து உள்ள வனப் பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு, குடிநீர் தேடி வனப் பகுதியில் இருந்து வெளியேறி கிராமங்களுக்குள் நுழைவது தொடர் கதையாக உள்ளது.
இந்நிலையில் உள்ள தொண்டாமுத்தூர், நரசீபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ‘ரோலக்ஸ்’ என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை தொடர்ச்சியாக கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களைச் சேதப்படுத்தி வந்தது.
அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, அடர்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு சென்று விட வேண்டும் என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்து வந்ததை தொடர்ந்து, அந்த ‘ரோலக்ஸ்’ காட்டு யானையை இடமாற்றம் செய்வது தொடர்பாக கோவை மாவட்ட வனத் துறையினர் உயரதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பினர்.
உயர் அதிகாரிகளின் அனுமதி கிடைத்ததை தொடந்து, அந்த யானையை பிடிப்பதற்கான பணிகளில் வனத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ரோலக்ஸ் யானை கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப் பகுதியில் இருந்து வெளியேறியதை அடுத்து, ஆனைமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் ஓய்வு பெற்ற வனக் கால்நடை மருத்துவர் மனோகரன் ஆகியோர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயன்றனர். மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையிலும், யானை அங்கு இருந்து தப்பி வனப் பகுதிக்குள் சென்றது. இதைத் தொடர்ந்து, யானைக்கு மயக்க ஊசி செலுத்துவதற்காக நாள்தோறும் இரவு, பகலாக யானையை கண்காணிக்கும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
தொடர்ந்து யானைக்கு மருத்துவர் விஜயராகவன் மயக்க ஊசி செலுத்த முயன்றார். அப்போது திடீரென அந்த யானை மருத்துவர் விஜயராகவனை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இதை அடுத்து ரோலக்ஸ் கண்காணித்து பிடிப்பதற்காக ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப்பில் இருந்து கொண்டு வரப்பட்ட கபில்தேவ், நரசிம்மன் மற்றும் முத்து ஆகிய மூன்று யானைகள் கண்காணித்து வந்தன. அதில் நரசிம்மன், முத்து ஆகிய இரண்டு யானைகளுக்கு மதம் பிடித்ததால் கடந்த 10 ம் தேதி டாப்சிலிப்பிற்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதற்கு பதிலாக அங்கிருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானையை கம்பன் ஊருக்கு கொண்டு வரப்பட்டு ரோலக்ஸ் காட்டு யானையை பிடிக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் இன்று அதிகாலை வனத்துறை கால்நடை மருத்துவர்கள் ரோலக்ஸ் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளனர். கும்கி யானைகளின் உதவியுடன் அதனை வாகனத்தில் ஏற்றியுள்ள வனத்துறையினர் காட்டு பகுதிக்குள் விட்டு கண்காணிக்கும் பணியை மேற்கொள்ள உள்ளனர்.
பல நாட்களாக போக்கு காட்டி வந்த ரோலக்ஸ் காட்டு யானை தற்பொழுது பிடிபட்டுள்ளது அப்பகுதி விவசாயிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.