fbpx
Homeபிற செய்திகள்அண்ணாமலையை ஓரங்கட்டி பாஜக சொல்லும் சேதி என்ன?

அண்ணாமலையை ஓரங்கட்டி பாஜக சொல்லும் சேதி என்ன?

அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளை பெற்ற பாஜக, தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. தொகுதிப் பங்கீட்டின்போதே பாஜகவுக்கு, அதிமுக வெற்றிவாய்ப்பு இல்லாத பெரும்பாலான தொகுதிகளை தள்ளிவிட்டதாக அண்ணாமலை உள்ளிட்ட சிலர் விமர்சனம் செய்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதன் காரணமாக, அதிமுகவிடம் சில தொகுதிகளை மாற்றி வாங்க பாஜக முயற்சித்ததாகவும் தகவல்கள் பரவின.

ஆனால், தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு உடனடியாக வேட்பாளர்களையும் அறிவித்து ஒரு வாரமாக தொடர்ந்து பிரச்சாரமும் மேற்கொண்டு வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி. இது பாஜகவில் சலசலப்புகளை ஏற்படுத்தி இருந்தது. பாஜகவில் வேட்பாளர் தேர்வில் சிக்கல்கள் நிலவி வந்தன. சில முக்கிய தலைவர்கள் ஒரே தொகுதியை குறிவைத்து கேட்டதும், வேட்பாளர் அறிவிப்பு தாமதமானதற்கு காரணமாக சொல்லப்பட்டது.

வேட்புமனு தாக்கல் நிறைவடைய இன்னும் இருநாளே உள்ள நிலையில், வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக. இந்த வேட்பாளர் பட்டியலில் மிகப்பெரிய ஷாக், அண்ணாமலைக்கு சீட் வழங்கப்படாதது தான். இந்த முறை தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் நயினார் நாகேந்திரன், எல்.முருகனின் கையே ஓங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த முறை அரவக்குறிச்சியில் போட்டியிட்ட அண்ணாமலை, இந்த முறை கோவையின் சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் தொகுதிகளை கேட்டு வந்தார். ஆனால், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கோவை வடக்கு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதனால் மொடக்குறிச்சியில் அண்ணாமலையை போட்டியிட சொல்லி தலைமை கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால், தனக்கு சாதகமான தொகுதி எதுவும் இல்லாததால் இம்முறை போட்டியிடுவதில்லை என்று அண்ணாமலை உறுதியாக மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

2024 மக்களவைத் தேர்தலில் அண்ணாமலை தலைமையில் மூன்றாவது அணியமைத்து களம் கண்ட பாஜக, சில தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்தது. பாஜகவின் எழுச்சிக்கு காரணமாக அக்கட்சியின் இளைய தலைமுறையால் கொண்டாடப்பட்ட அண்ணாமலைக்கு சீட் வழங்கப்படாதது, அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அண்ணாமலை மட்டு மல்லாமல் அவரது ஆதரவாளர்களான அமர்பிரசாத் ரெட்டி, அஸ்வத்தாமன், எஸ்.ஜி.சூர்யா, வினோஜ். பி.செல்வம், ஏபி முருகானந்தம் ஆகியோருக்கும் இந்த முறை சீட் கிடைக்கவில்லை.

அண்ணா மலைக்கு சீட் வழங்கப்படாதது மட்டு மல்ல, அவரது ஆதரவாளர்களும் மொத்தமாக ஓரங்கட்டப்பட்டுள் ளனர் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
இதன் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரின் ‘கூட்டு வியூகம்’ இருப்பதாக அண்ணாமலையின் ஆதரவாளர்கள் புழுங்குகிறார்கள்.

ஆக, தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்வதே என் பணி என அண்ணாமலை சொன்னாலும் தமிழக சட்டப்பேரவை தேர்தலைப் பொறுத்தவரை பாஜக வேட்பாளர் பட்டியல் நமக்குச் சொல்லும் சேதி என்னவென்றால் அண்ணாமலை முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டு விட்டார் என்பதே.

யாரும் எதிர்பார்க்காத வகையில் அண்ணா மலைக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. ஒருகாலத்தில் தமிழக பாஜகவின் முகமாக பார்க்கப்பட்டவர் அண்ணா மலை. ஏன், பாஜகவின் முதல்வர் வேட்பாளராகவும் கருதப்பட்ட அவரை பிரதமர் மோடியும் அமித் ஷாவும் கூட முற்றிலுமாக புறக்கணித்திருப்பது அவரது ஆதரவாளர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அண்ணாமலையின் கை சறுக்கிவிட்டது என்பது வெள்ளிடை மலையாகத் தெரிகிறது. எப்போது மீண்டெழுவார் அவர்? என்ற கேள்வி யும் எழுந்துள்ளது. தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கப்போகிறது, அதன் பிறகு பாஜக மேலிடத்தின் நகர்வுகள் எப்படி இருக்கும்? என்பதைப் பொறுத்தே அண்ணாமலையின் ‘ஜாதக பலன்’ கணிக்கப்படும்.

பொறுத்திருந்து பார்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img