பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.சின்னசாமி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பெருந்துறை சிப்காட் பிரச்சனைகள் குறித்து மனு அளித்தார்.
குறிப்பாக, பெருந்துறை சிப்காட் தொழில் வளர்ச்சி மையம் அமைப்பதற்காக விவசாயிகளிடமிருந்து அரசால் நிலமெடுப்பு சட்டம் மூலம் கையகப்படுத்தப்பட்ட சுமார் 200 ஏக்கர் நிலங்களுக்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாகியும் நியாயமான இழப்பீடு கிடைக்காத அவல நிலை பற்றி எடுத்துக்கூறி, உயர்நீதி மன்ற உத்தரவுப்படியான இழப்பீட்டுத் தொகைகளை உடனடியாக வழங்கவும், உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதிகபட்ச இழப்பீட்டு தொகையை அரசே நிர்ணயித்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27-12-2023 அன்று சிப்காட் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினருடன் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளது பற்றியும் எடுத்துக் கூறினார்.
இது தொடர்பான மக்கள் நலச் சங்கத்தின் கோரிக்கை மனுவை முழுமையாக படித்து, விபரங்களை கவனமுடன் கேட்டறிந்த அமைச்சர், அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.