தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. சில இடங்களில் அரசியல் கட்சியினரிடையே மோதல் இருந்த நிலையில், மாநிலம் முழுவதும் வாக்காளர்கள் பெயர்கள் காரணம் இன்றி நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் 830 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது. கோவை நாடாளுமன்றத் தொகுதி முழுவதும் ஒரு லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டு இருப்பதாக அத்தொகுதியின் பாஜக வேட்பாளரும் கட்சியின் மாநிலத் தலைவருமான கே.அண்ணாமலை புகார் செய்துள்ளார். இதேபோல மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியிலும் ஒரு லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இந்த அளவிற்கு அதிகளவில் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டு இருப்பது உண்மையா என்பதை தேர்தல் ஆணையம் தான் விசாரித்து வெளிப்படுத்த வேண்டும். ஆனால், தமிழ்நாடு முழுவதும் பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன என்பது பட்டவர்த்தனமாக ஓட்டுப்பதிவின் போதே தெரிந்தது.
வாக்களிக்க ஆர்வத்துடன் வந்தவர்கள் குறிப்பாக முதியோர், பட்டியலில் தங்கள் பெயர் இல்லாததை அறிந்து திரும்பிச் சென்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிலும் சிலரது பெயர்கள் இறந்தவர்கள் லிஸ்டில் இருந்ததை அறிந்து அவர்கள் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. அவர்களில் ஒருவர் நான் என்ன பேயா?
எனக் கேட்டு வாக்குச்சாவடி அலுவலர்களைத் திணறடித்தார். ஓட்டு போட முடியவில்லையே எனக் கண் கலங்கியவர்களை தொலைக்காட்சியில் பார்த்தோம்.
சில வீடுகளில் பார்த்தால் ஒரே மையத்தில் ஓட்டு போடக்கூடிய தம்பதியரில் கணவன் பெயர் உள்ளது. மனைவி பெயர் இல்லை. கணவன் பெயர் ஒரு சாவடியிலும் மனைவி பெயர் இன்னொரு இடத்திலும் இடமாறி இருந்தது. சில வீடுகளில் இரண்டு பேர் பெயருமே இல்லை.
இது பற்றிய செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்க்க போதுமான வாய்ப்பை அளித்தோம்
என்று பட்டும்படாமலும் பதில் அளித்துள்ளார்.
கடந்த தேர்தலில் வாக்களித்தவர்கள் அனைவருமே பட்டியலில் தங்கள் பெயர் இருக்கிறதா என்பதை சரி பார்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் எதிர்பார்த்தாலும் அது சரியாகப்படவில்லை. சாதாரண பாமர மக்களிடம் இதை எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? கடந்த தேர்தலில் வாக்களித்தவர்கள் வரும் தேர்தலிலும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் என்று தானே நினைத்துக் கொண்டிருப்பார்கள்?
100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் விதவிதமான பிரசாரத்தில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியது. அதே நேரத்தில் தகுதியான அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை தேர்தல் ஆணையம் 100 சதவீதம் உறுதி செய்திருக்க வேண்டும் அல்லவா?
வீடு வீடாக சென்ற அலுவலர்கள் என்ன பண்ணினார்களோ தெரியவில்லை.
உண்மையான வாக்காளர்கள் பெயரை எந்த அடிப்படையில் நீக்கினார்கள்? ஒருவர் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து காரணமின்றி நீக்குவதற்கு முடியும் என்றால் இதற்கு யார் பொறுப்பு?
ஆக, தேர்தல் ஆணையத்தின் மீது பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அடுத்து வரும் தேர்தல்களிலாவது இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
100 சதவீத வாக்களிப்பிற்காக விழிப்புணர்வு தொடங்குவதற்கு ஒருசில மாதங்களுக்கு முன்பாகவே வாக்காளர் பட்டியலில் 100 சதவீத வாக்காளர்களும் இடம் பெற்றிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தும் விழிப்புணர்வை முன்னெடுக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் இதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்!