நாட்டின் 18-வது மக்களவைக்கான தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 அன்று அமைதியாக நடந்து முடிந்தது. ஆனால், வாக்குகள் குறைவாகவே பதிவாகியிருந்தது. அதாவது, தமிழகத்தில் 69.72% ஓட்டுகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தர்மபுரி தொகுதியில் அதிகபட்சமாக 81 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. இது கடந்த தேர்தலை விட 2 சதவீதம் குறைவு என்றாலும் முதலிடத்தில் இருப்பதால் வறட்சியான பகுதிகளைக் கொண்ட அத்தொகுதி மக்களை பாராட்டத்தான் வேண்டும். மத்திய சென்னையில் மிகமிகக் குறைவாக 53 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகி இருக்கிறது.
கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் 2.5.சதவீத வாக்காளர்கள் வாக்களிப்பதைத் தவிர்த்திருக்கிறார்கள். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 34 தொகுதிகளில் பதிவான வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்து விட்டது. தூத்துக்குடி தொகுதியில் கடந்த தேர்தலை விட 10 சதவீத வாக்குகள் குறைந்து பதிவாகி இருக்கிறது.
என்ன காரணத்தால் மக்கள் ஓட்டு போட வரவில்லை? வெயில் அதிகமாக இருந்ததால் வரவில்லையா? யார் ஜெயித்தால் நமக்கென்ன என்ற அலட்சியமா? போதிய அளவு பணம் பட்டுவாடா நடக்கவில்லை என்பதாலா? அல்லது வீடுவீடாக பூத் சிலிப் வழங்குவதில் தேர்தல் கமிஷன் ஏனோதானோ என நடந்து கொண்டது காரணமா?… என பல்வேறு காரணங்களை முன் வைத்து விவாத மேடை அமைத்து மக்கள் சூடுபறக்கப் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
என்ன காரணமாக இருந்தாலும் வாக்குப்பதிவு குறைந்து போனதற்கு முழுமுதற் காரணம் வாக்காளர் பெருமக்கள் தான்; வாக்களிக்கச் செல்லாமல் முடங்கிக் கிடந்த வாக்காளர்கள் மட்டும் தான் காரணம் என்றால் மிகையல்ல.
இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்த காரணத்தால் அது எந்த கட்சிக்கு சாதகமாக அமையும். எந்த கட்சியின் வெற்றியை பாதிக்கும் என்று அரசியல் கட்சியினர் கணக்கு போடத் தொடங்கி விட்டனர்.
ஆனால் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததால் வெற்றி, தோல்விகள் இடமாறிச் செல்ல வாய்ப்புகள் இல்லை. யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? என்ற கேள்விக்கு இடமில்லை என்பது தான் அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. வாக்குப்பதிவு அதிகம் வந்திருந்தால் வெற்றி வாய்ப்புக்கான லீடிங் அதிகமாக இருக்கும். இப்போது பதிவான வாக்கு சதவீதம் குறைந்திருப்பதால் ‘லீடிங்’ கொஞ்சம் குறைவாக அமையும். அவ்வளவு தான் என்கிறார்கள்.
வாக்களிப்பது என்பது மிகப்பெரிய ஜனநாயக கடமை. உதாரணத்திற்கு… ஏதோ ஒரு பாதிப்பிற்காக வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் அரசு சார்பில் தலா ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இது ஒரு வாதத்திற்குத் தான்.
வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்திருந்தாலும் 110 டிகிரி வெயில் கொளுத்தினாலும் அந்த தொகையை வாங்காமல் வீடுகளுக்குள் ஒரு வாக்காளராவது முடங்கிக் கிடந்திருப்பார்களா? கிட்டத்தட்ட 100 சதவீதம் பேரும் 1000 ரூபாயை வாங்கி விடுவார்கள் அல்லவா?
நம் நாடு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இங்கேயே வாக்களிப்போரின் எண்ணிக்கை இப்படிக் குறைந்து போனால் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு குறைந்து போகும்.
சர்வாதிகார நாடுகள் கூட நம்மைப் பார்த்து பரிகசிக்கும். தனித்தனியே தேர்தல் நடத்தியே இப்படி என்றால்… ஒரே நாடு ஒரே தேர்தல்
கொள்கை அமலானால் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் குறையவே செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
வாக்களித்தல் என்ற ஜனநாயக கடமையை செய்யத்தவறியவர்களுக்கு அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு தடை விதித்தால் கூட பரவாயில்லை என்றே தோன்றுகிறது.
இதற்கு சாத்தியமில்லை என்றால் வேறு என்ன தான் வழி? அதனை ஆட்சியாளர்களோடு சேர்ந்து தேர்தல் ஆணையம் தான் தேட வேண்டும்!