இந்தியாவின் துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் என்.டி.ஏ கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட, மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் (சிபிஆர்), மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் 452 உறுப்பினர்களின் வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஓய்வுபெற்ற நீதிபதி பி.சுதர்சன் ரெட்டி தோல்வியுற்றார். இந்தத் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது.
ஏனெனில், தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கூட அவர்களால் ஒன்றுபடுத்த முடியவில்லை. நீதிபதி பி.சுதர்சன் ரெட்டிக்கு 324 வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு 300 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. ஆனால், அவருடைய போட்டியாளரான ராதாகிருஷ்ணன், என்.டி.ஏ கூட்டணி எதிர்பார்த்த வாக்குகளைவிட 13 வாக்குகள் அதிகமாகப் பெற்றார்.
மொத்தமுள்ள 781 வாக்காளர்களில், 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை. 767 பேர் வாக்களித்தனர். அதில், 15 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
அரசியல்சாசனத்திற்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வுக்கும் இடையிலான போர் என்று எதிர்க்கட்சிகள் இந்தத் தேர்தலை முன்வைத்தன. ஆனாலும் இந்த தேர்தல் அவர்களுக்கு மேலும் ஒரு தோல்வியையே கொடுத்துள்ளது.
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், ராமதாஸ், அன்புமணி, பிரேமலதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பல தசாப்த கால அரசியல் அனுபவம், களப்பணி மற்றும் மிதமான அணுகுமுறையால் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் இந்த உயரிய இடத்தைப் பெற்றுள்ளார். அவரது அரசியல் பயணம் பெரும்பாலும் எளிமையாகவும், அதே சமயம் வியூகமிக்கதாகவும் இருந்துள்ளது.
சி.பி.ராதாகிருஷ்ணன் எப்போதுமே, மக்கள் பணிகளில், நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட்டவர். பொது வாழ்வில், தொடக்க நாட்களிலிருந்து, தற்போது நாட்டின் மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவராக உயர்ந்திருப்பது, அவரது கடின உழைப்பிற்கு சிறந்த சான்றாகும் என்பது மிகையன்று. அவர் துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்பது தமிழர்கள் அனைவருக்கும் கட்சிகளைக் கடந்து மகிழ்ச்சியை தரும் நற்செய்தியாகும்.
தமிழ் மண்ணின் மைந்தன் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்!



